சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை...எங்கு தெரியுமா ?
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என புதுவை அரசு அதிரடி
புதுச்சேரி : ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் சமீப காலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இது சட்டவிரோதம் ஆகும். இந்த சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவது தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து செய்யப்படும்.
சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படும். எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது தமிழக காவல்துறை.
மேலும் சிறுவர்கள் மூலம் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் சமீப காலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருவதால் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்