PTR on Jeyakumar: முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை - ஜெயகுமாருக்கு பிடிஆர் பதில்
முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை . மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம் - பிடிஆர்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளாதது தமிழக மக்கள் செய்யும் துரோகம் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டரில், "ஒன்றிய நிதியமைச்சர் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என்று பதிவிட்டார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில், கடந்த 17ம் தேதி 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 17-ஆம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்குமேல்தான் தகவல் கூறப்பட்டது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் கருப்பொருள்கள் குறித்த தகவல்கள் மேலும் தாமதமாக தரப்பட்டது. முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே அதை ரத்துசெய்து விட முடியவில்லை. இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு கூட, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்ல இருக்கிறேன்" என்று காமெடியாக பதிலளித்தார்.
பிடிஆர்-ன் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
டெல்லியில் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வரிடம் பிடிஆர் தனி விமானம் கேட்டதாகவும், அதற்கு முதல்வர் மறுப்புத் தெரிவித்தாகவும் கூறப்ப்ட்டது. இதன் காரணமாகவே, பிடிஆர் டெல்லி செல்லவில்லை. இது, முழுக்க முழுக்க ஈகோ சம்பந்தப்பட்ட விசயம் என்று பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலன் என்பவர் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும், "உறவினர் பொண்ணுக்கு வளைகாப்பு. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லவில்லை’ இதெல்லாம் ஒரு பதிலா?" என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்துகொள்ளாதது தமிழக மக்கள் செய்யும் துரோகம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம். அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பொது மக்கள் - வணிகர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜி எஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஒரு முறை கூட பங்கேற்காமல் இருந்தது இல்லை. நிதியமைச்சர் தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? தம்பி! பி.டி.ஆர் கவனத்தில் கொள்" என்று தெரிவித்தார்.
அதிமுக ஜெயக்குமாரின் இந்த பதிவுக்கு பிடிஆர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையை ஜிஎஸ்டி மாமன்றமும், ஒன்றிய நிதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர்வதற்காக நான் அந்த அறிக்கையை பகிரவில்லை. இந்த விதிகளை புரிந்து கொள்ளாத சில கயவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை . மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
And I forgot alleged "TN Specialist in Delhi🤣" @RAJAGOPALAN1951 - who made up stories about Charter flights "not approved" to imagine that he knows something about anything🤦♂️
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) September 22, 2021
Reality:
- I have a small-plane phobia
- If I didn't, I can charter w/o asking anyone else to pay https://t.co/XGydGvLiYM
மேலும், நான் எப்போதும் தனிவிமானத்தை புறக்கணிப்பவன். குட்டி விமானங்களில் பயணம் செய்வதற்கு பயம். பயம் இல்லாமல் இருந்தாலும் கூட, தனிவிமானத்தில் பயணம் செய்ய எனக்கு யார் உதவியும் தேவையில்லை" என்று தெரிவித்தார்.