Prime Minister Modi: வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. வெளியான தகவல்கள் என்னென்ன?
வருகிற நவம்பர் 11ம் தேதி தென்னிந்தியா வரும் பிரதமர் மோடி, சென்னை- மைசூர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
![Prime Minister Modi: வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. வெளியான தகவல்கள் என்னென்ன? Prime Minister Modi will inaugurate on 11th Vande Bharat Express between Chennai-Mysore Prime Minister Modi: வருகிற 11-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.. வெளியான தகவல்கள் என்னென்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/8f3a144a3f5958b6e40eb70809c405c71666929597571571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வருகிற நவம்பர் 11ம் தேதி தென்னிந்தியா வரும் பிரதமர் மோடி, சென்னை- மைசூர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசு ரயில்வே துறையில் நவீனத்தையும், வேகத்தையும் இணைக்கும் விதத்தில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலானது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இந்த வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நான்கு வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த 4 ரயில்களும் வட மாநிலங்களில் மட்டுமே இயங்கி வந்தநிலையில், தென்னிந்தியாவில் இதுவரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படவில்லை என்ற குறை இருந்து வந்தது. தற்போது இந்த குறையை போக்கும்விதமாக சென்னை - மைசூர் இடையிலான வந்தேபாரத் ரயில் சேவையை வருகிற 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 11ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய நாள் காலை 10 மணியளவில் பிரதமர் மோடி, பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்து சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது முனையத்தை திறந்து வைக்கிறார். தொடர்ச்சியாக, கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, அதே நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பிரதமர் மோடி, தென்னிந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூர் இடையிலான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூரில் தொடங்கி வைக்கிறார்.” என தெரிவித்தார்.
சென்னை முதல் பெங்களூர் மற்றும் மைசூரு இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். மொத்தம் 483 கிலோ மீட்டர் தொலைதூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அசர வைக்கும் வேகம் :
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் அதிக வேகத்தில் செல்லக்கூடியது. பிற ரயில்களை காட்டிலும் இதில் நவீன வசதிகள் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், இணைய வசதிகள், மிகவும் சொகுசான இருக்கை வசதிகள், கழிவறை வசதிகள் ஆகிய உள்ளன.
வந்தே பாரத் ரயிலானது ஒரு நிமிடத்திற்கு உள்ளேயே அதாவது 52 விநாடிகளிலே பூஜ்ஜியம் கிலோமீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும். வந்தே பாரத் ரயிலானது டெல்லி - வாரணாசி, நியூ டெல்லி – ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத், மும்பை சென்ட்ரல் – காந்திநகர் (குஜராத்) மற்றும் டெல்லி முதல் – அம்ப் அந்தாரா ( இமாச்சல பிரதேசம்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து மைசூர் இடையிலான இந்த ரயில் மங்களூர் வழியாக இயக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், வருங்காலங்களில் டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – லக்னோ, கவுரா – ராஞ்சி, மும்பை – புனே, டெல்லி – போபால், பெங்களூர் முதல் கன்னியாகுமரி, கவுரா – பூரி, எர்ணாகுளம் – பெங்களூர், புனே – பெங்களூர், செகந்திராபாத் – திருப்பதி – பெங்களூர், சென்னை – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சில ரயில்கள் சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்பட உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்:
பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் 11ம் தேதி திண்டுக்கலில் உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் கலந்துகொள்ளும் மோடி, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)