Pongal 2024: பொங்கல் கொண்டாட்டம்! கோயில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
தைத் திருநாளை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொங்கல் கொண்டாட்டம்:
இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று நம் நினைவில் வருவது சர்க்கரை பொங்கல், கரும்பு மற்றும் மிக முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்.
ஆண்டுதோறும் வரும் தை மாதம் 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தைப்பொங்கல். அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மக்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கோயில்களில் அலைமோதும் கூட்டம்:
நம் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு பண்டிகை நாளாக இருந்தாலும் நிச்சயம் சாமி தரிசனம் இல்லாமல் இருக்காது. நிச்சயம் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள். நல்ல நாள், சுப நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களில் மக்கள் கோயில் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி இன்றும் பொங்கல் பண்டிகையன்று காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை மயிலை கபாலீஸ்வரர், கார்னீஸ்வரர் கோயில், மருதீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தவிர அறுபடை வீடுகள், மீனாட்சி அம்மன் கோயில் என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களில் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகமாக வருகை தருவார்கள்.
போலீஸ் பாதுகாப்பு:
முக்கியமாக இன்று பொங்கல் பண்டிகை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடத்தப்பட்டது. பலரும் மாலை அணிந்து, விரதம் இருந்து பால் குடம், காவடி எடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் திருச்செந்தூர் பகுதி முழுவதும் போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.