அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ம.க: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவிப்பு!
கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் தோல்விக்குப் பின் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. கூட்டணி ஒருபுறம் தொடர்ந்தாலும், செயல்பாடுகள் தனித்து இருந்தது. இதற்கிடையில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என சமீபத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை(செப்.15) முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவிருக்கும் நிலையில், இதுவரை எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதனால் அதிமுக தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதைத் தொடர்ந்து 9 மாவட்ட இடைத்தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது.
அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்த பாமக விலகி, தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் நிலைப்பாடு நாளை தெரியவரலாம்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு...
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: நாளை மறுநாள் வேட்பு மனுத்தாக்கல்... அக்.12 வாக்கு எண்ணிக்கை...! முழு விபரம் இதோ!#LocalbodyElection #Annoucement #TamilNadu #October12 #Voting #Counting #TamilNews #Election #Districts https://t.co/hBkijFKtTZ
— ABP Nadu (@abpnadu) September 13, 2021