Ramadoss Complaint: தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்; தப்புமா அன்புமணியின் தலைவர் பதவி.?
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவில் அவரது தலைவர் பதவி ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்திய நிலையில், அக்கூட்டத்தில், அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டிற்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அவ்வாறு செய்தது கட்சி விதிகளுக்கு முரணாதது என்றம், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் ராமதாஸ் கூறியுள்ளது என்ன.?
தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் அளித்துள்ள புகாரில், கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல், அன்புமணி பொதுக்குவை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம் என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும், அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம்
கடந்த 9-ம் தேதி, மாமல்லபுரத்தில், அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தான்தான் தலைவர் என்று அன்புமணி அதிரடியாக அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பிற்கு கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அன்புமணியின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு, 2026-ல் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, நமது வழிகாட்டி சமூகநீதி காவலர் ராமதாஸ் தான் என்றும் அவரது கனவுகள், லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம் எனவும் கூறினார்.
பொதுக்குழு செல்லாது என அறிவித்த பாமக பொதுச் செயலாளர்
இந்நிலையில், மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது என, ராமதாஸால் நியமிக்கப்பட்ட பாமக பொதுச் செயலாளர் முரளி சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். பொதுக்குழு நடைபெற்ற அன்றே செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமதாஸை விட அப்படி என்ன பதவி ஆசை வந்துவிட்டது எனவும், அவரை விட பதவிதான் அன்புமணிக்கு முக்கியமாக இருக்கிறது என்றும் விமர்சித்தார்.
மேலும், கட்சியில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அன்புமணியிடம் எடுத்து கூறி இருந்தால், இந்த மோதல் வந்திருக்காது எனவும், தந்தையையும், மகனையும் தைலாபுரத்தில் இருக்கச் சொல்லி 3 நாட்கள் கழித்து கேட்டிருந்தால், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்றும் கூறினார். மே 28-ம் தேதியோடு அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அவர் நடத்திய பொதுக்குழு கூட்டம் நிச்சயம் செல்லாது எனவும் முரளி சங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் தன்னை கைவிட்டதால், தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளார். அங்கு அவருக்கு நீதி கிடைக்கிறதா என்பதை பார்க்கலாம்.





















