Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
அன்புமணி தொடர்ந்து கூட்டத்தை புறக்கணிப்பது குறித்தும், அவருடன் மனக்கசப்பா? என்பதற்கும் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரம் தைலாவரம் தோட்டத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ராமதாஸ் அளித்த பேட்டியில்,
"இன்று 5 ஆயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளேன். நீதிபதிகளை உருவாக்கியுள்ளேன். இவர்கள் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள்.
நான்தான் பேச முடியும்:
ஏராளமான நீதிபதிகள் கீழமையில் இருந்து உயர்நீதிமன்றம் வரை உருவாக்கியுள்ளேன். வன்னியர் சமுதாயம் மட்டுமின்றி 315 பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலும் உருவாகியுள்ளனர். அது என்னுடைய உழைப்பால் அவர்களும் பயன்பட்டுள்ளனர்.
சமூக நீதி என்றால் இந்திய அளவில் பேசக்கூடியது. என்னைவிட்டால் வேறு ஆளே கிடையாது. நான் ஒருவன்தான் அதைப் பற்றி பேச முடியும். மற்றவர்களுக்கு அதைப் பற்றி தெரியாது. மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட இந்த சமுதாயம் படித்துக்கொண்டிருக்கிறது. படித்து வழக்கறிஞர்களாக வந்திருக்கிறார்கள்.
அன்புமணியுடன் மனக்கசப்பா?
அந்த காலத்தில் வழக்கறிஞர்கள் சிங்கம்போல கர்ஜிக்கிறார்கள். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அப்படி கர்ஜிக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை. அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் வந்து கலந்து கொள்வார். மனக்கசப்பு இல்லை. இனிப்பைத் தான் தருவேன். இனிப்பான செய்திகளைத்தான் சொல்லிருக்கேன். 35 வாரம் வியாழக்கிழமை, வியாழக்கிழமை கூடினோம்.
அந்த 35 வாரங்களில் இனிப்பான செய்திகளைத்தான் சொல்லிருக்கேன். சிங்கத்தின் கால்கள் பழுதும் படவில்லை. சீற்றமும் குறையவில்லை. சீற்றம் அதிகமாகத்தான் ஆகிருக்கு. கால்கள் பழுதுபடவில்லை. அதனால், நீச்சல் அடிச்சேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்புமணி - ராமதாஸ் மோதல்
பாமக-வில் அன்புமணிக்கும், ராமதாஸ்க்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. செங்கல்பட்டில் நடந்த முழு சித்திரை மாநாட்டில் பங்கேற்ற ராமதாஸ் கட்சியினரை எச்சரிக்கும் விதமாக சில கருத்துக்களை கூறினார். கூட்டணி குறித்து முடிவு எடுக்க நான் உள்ளேன் என்றும், நடக்காது தம்பி என்றும், கண்காணிக்கப்படுகிறாய் என்றும் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்தார்.
புறக்கணிக்கும் அன்புமணியும், ஆதரவாளர்களும்:
ராமதாஸின் பேச்சு அன்புமணியை குறிவைத்தே பேசப்பட்டதாக தொடர்ந்து தகவல்கள் வெளியானது. இது அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அதன்பின்பு ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெறும் 13 பேர் மட்டுமே பங்கேற்றது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் விதமாகவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்திருப்பதாக தகவல் வெளியானது.
ஆசுவாசப்படுத்திய ராமதாஸ்:
முழு சித்திரை மாநாட்டிற்கு பிறகு ராமதாசை அன்புமணி நேரில் சென்று இதுவரை சந்திக்காததும், தொடர்ந்து அவரது சந்திப்பை தவிர்த்து வருவதும் பாமக-வினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஆசுவாசப்படுத்தும் விதமாக அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்று ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.





















