ராமதாஸ் அதிரடி! அன்புமணிக்கு அதிர்ச்சி, பாமகவில் பரபரப்பு! புதிய நிர்வாகிகள் நியமனம், அடுத்தது என்ன?
புதிய நிர்வாகிகளை நியமிக்கும் மருத்துவர் ராமதாஸ் அதற்கான நகல்களை அன்புமணிக்கு அனுப்புவதை தவிர்த்துள்ளதால் கட்சியில் பரபரப்பு

விழுப்புரம் : புதிய நிர்வாகிகளை நியமிக்கும் மருத்துவர் ராமதாஸ் அதற்கான நகல்களை அன்புமணிக்கு அனுப்புவதை தவிர்த்துள்ளதால் கட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மகன் மோதல்
பாமக கட்சியில் மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போகு இருந்து வருகிற நிலையில் நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிய தாக 21 பேர் கொண்ட நிர்வாக குழுவினை மருத்துவர் ராமதாஸ் நியமித்து நிர்வாக குழு கூட்டத்தினை நேற்றைய தினம் மருத்துவர் ராமதாஸ் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காததால் 21 பேர் கொண்ட நிர்வாக குழுவில் அன்புமணி ராமதாசின் பெயர் இடம்பெறாமல் நீக்கபட்டார்.
பாமக நிறுவனர் புதியதாக நியமிக்கும் நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மருத்துவர் ராமதாஸ் வழங்கினால் அதற்கான நகல்களை அன்புமணி ராமதாஸ், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கெளரவ தலைவர் ஜி.கே மணிக்கு அனுப்பி வைப்பார்.
நிர்வாக குழு கூட்டிய பிறகு இன்று புதிய நிர்வாகிகளை நியமித்த ராமதாஸ் நியமனத்திற்காக நியமன கடிதங்களை வழங்கியதோடு அந்த நகல்களை அன்புமனி ராமதாசுக்கு அனுப்பாமல் மருத்துவர் ராமதாஸ் புறக்கணித்துள்ளார். நிர்வாக குழுவில் இருந்த அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அடுத்த கட்டமாக செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்கலாமா இல்லையா என்பது குறித்து செயர்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமை நிர்வாக குழு கூட்டம்
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று திடீரென பாமகவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். இக்கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், தென் மண்டல பொறுப்பாளர் பரந்தாமன், கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் ராம முத்துக்குமார், சமூக முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் சிவப்பிரகாசம், மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில மகளிர் அணி தலைவர் வழக்கறிஞர் சுஜாதா, முன்னாள் நீதிபதி அருள், முன்னாள் எம்பி துரை, இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ, முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஏகே மூர்த்தி, ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புமணியை விமர்சித்த ராமதாஸ்
இந்த கூட்டத்தின் தொடக்கத்திலேயே அன்புமணியை மிகக் கடுமையாக விமர்சித்து ராமதாஸ் பேசி உள்ளார். அப்போது சில நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமதாசை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும் ராமதாஸ் அன்புமணி குறித்து தொடர்ந்து பேசியுள்ளார். ‘அன்புமணியின் செயல்பாடுகள் குறித்து கட்சியினர் யாரும் அச்சப்பட தேவையில்லை. கட்சியை நான் தொடர்ந்து வழி நடத்துவேன். நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்யுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.
கிராமங்கள் தோறும் சென்று கட்சியை வலுப்படுத்துங்கள். திண்ணை பிரசாரம் செய்யுங்கள். பூம்புகார் மாநாட்டு பணிகளில் கவனம் செலுத்துங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். எதை பற்றியும் கவலைப்படாதீர்கள்’ என ஆவேசமாக ராமதாஸ் பேசினாராம். பாமக நிர்வாகிகள் யாரும் அன்புமணி பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசக்கூடாது என்றும் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.





















