Anbumani On Caste: என்னைப் பொருத்தவரை சாதி ஒரு அழகிய சொல்...பாமக தலைவர் அன்புமணி பேச்சு
சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்டவார்த்தை போல பார்க்கிறார்கள். சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல்" என பாமக தலைவர் அன்புமணி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில், பாமகவின் 35ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
”பா.ம.க இல்லாவிட்டால் நீங்கள் தமிழகத்தில் நிறைய இழந்திருப்பீர்கள். இன்றைக்கு பா.ம.க இல்லா விட்டால், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவும் பல இழப்புகளை கண்டிருக்கும். 108 ஆம்புலன்ஸ் இருந்திருக்காது. பா.ம.க என்ற கட்சி இல்லாவிட்டால் இந்தியாவில் தமிழகத்தில் 20 சதவீதம் எம்.பி.சி இருந்திருக்காது. இதனால் அடித்தள மக்கள் யாரும் வேலைக்கு போயிருக்க மாட்டார்கள். பா.ம.க இல்லாவிட்டால் யாருக்கும் படிப்பறிவு இருந்திருக்காது .
பா.ம.க இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது
பா.ம.க இல்லாவிட்டால் இந்தியாவில் பட்டியலிடன , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. பா.ம.க இல்லா விட்டால் தமிழகத்தில் சமச்சீர் கல்வி, ஆன்லைன் கேம் தடை கிடைத்திருக்காது. பொது இடங்களில் புகை பிடிக்கும் தடை சட்டம் நாங்கள் இல்லாவிட்டால் கிடைத்திருக்காது.
போலியோ இறப்பு விகிதம் குறைவு, சேலம் ரயில்வே கோட்டம் வந்தது, மீட்டர் கேஜை பிராட் கேஜாக மாற்றியது எல்லாம் பா.ம.க -வால் தான். பா.ம.க இல்லா விட்டால் 500 மதுக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டு இருக்காது. இப்படி எத்தனையோ சாதனைகள் தொடர்ச்சியாக செய்து வருகிறோம், முதல்வரை கையெழுத்து போட வைத்து கொண்டு இருப்பது பாமக.
சாதி என்பது ஒரு அழகிய சொல்
நம் எதிரிகள் நம் மீது பொறாமை கொண்டு, எப்படியாவது நமக்கு அவப்பெயர் ஏற்படுத வேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதிக்கட்சி என்ற கருத்தை திணிக்கின்றனர். இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டோம். பாட்டாளி மக்கள் கட்சி எல்லா சமுதாயத்திற்கும், எல்லா மதத்திற்கும், எல்லா சாதிகளுக்கும், எல்லா இனத்திற்கும், எல்லா மொழிகளைச் சார்ந்தவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சி. இந்தியாவிற்கு கொண்டு வந்த ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு இவையெல்லாம் சாதி பிரச்சனையா?. சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்டவார்த்தை போல பார்க்கிறார்கள். சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல். சாதியில் பிரச்சனைகள் இருப்பதை களையெடுக்க வேண்டும். சாதியால் வரும் அடக்குமுறைகளை விரட்ட வேண்டும். ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















