PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
PM Modi Speech Coimbatore: கோவை வேளாண் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, கோவையை தென்னகத்தின் சக்தி பீடம் என்றும், ஜவுளித் தொழில் மூலம் தேசத்திற்கே பங்களிப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

“விவசாயிகள் பேசியது புரியவில்லை, ஆனால் உணர்ந்தேன்“
கோவை வேளாண் மாநாட்டில் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழ் தெரியாததால் தான் வருந்துவதாகவும், சிறு வயதிலிருந்தே தமிழ் கற்றுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார். விவசாயிகள் பேசியதை என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், உணர முடிந்தது. இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது என அவர் கூறினார்.
வேளாண் மாநாட்டிற்கு வந்தபோது பச்சை துண்டை வீசி விவசாயிகள் வரவேற்றனர். அவர்களின் இந்த வரவேற்பை பார்த்தபோது, பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ என எண்ணியதாக மோடி குறிப்பிட்டார். தென்னகத்தின் சக்தி பீடமாக கோவை இருப்பதாகவும், கோவை ஜவுளித் தொழில் தேசத்திற்கே பங்களிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
“உலகின் இயற்கை வேளாண் மையமாக மாறும் இந்தியா“
வரும் ஆண்டுகளில், இந்திய வேளாண் துறையில் பல மாற்றங்க நிகழும் என்றும், உலக அரங்கில் முக்கிய இடம் பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமாக்குவதாகவும், உலகின் இயற்கை வேளாண் மையமாக இந்தியா மாறுவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
உயிரி உரங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நிறைய பலனடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, விவசாயிகள் கடன் அட்டை மூலம், இந்த ஆண்டு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிறு விவசாயிகளுக்கு இதுவரை 4 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
9 கோடி விவசாயிகளுக்கு 21-வது தவணையாக 18,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறையில் நாம் புரட்சி செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
“இயற்கை வேளாண்மை இந்த நூற்றாண்டின் தேவை“
இயற்கை வேளாண்மை என்பது இந்த நூற்றாண்டின் தேவை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதிநவீன ரசாயனம் நம் மண்ணின் வளத்திற்கு கேடு என்பதோடு, இதனால் செலவீனமும் அதிகரித்து வருவதாகவும் கூறினார். இயற்கை வேளாண்மை என்பது சுதேசி கொள்கையின் ஒரு பகுதிதான் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது இந்தியாவின் பாரம்பரியம் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உணவுப் பண்பாட்டில் சிறு தானியங்கள் எப்போதும் உள்ளதாகவும், முருகனுக்கு தேனையும், திணையையும் படைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு பயிர் வேளாண்மையிலிருந்து விவசாயிகள் மாற வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, ஊடு பயிர் சாகுபடி மாதிரியை நாடு முழுக்க விரிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
“1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் கோவை“
13-ம் நூற்றாண்டிலேயே கோவையில் காலிங்கராயன் கால்வாய் அமைக்கப்பட்டு நீர்பாசனம் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்த மண்ணில் ஓடும் நதிகளை, நீரை முறைப்படுத்தி நீர்மேலாண்மையை செய்ததும் இங்குதான் என தெரிவித்தார். மேலும், ஒரே ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில் இயற்கை விவசாயம் என்ற புரட்சியை தொடங்குங்கள் என்றம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும், வேளாண்மை பாடத் திட்டத்தில் இயற்கை விவசாயம் கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த மாநாடு, நாட்டின் இயற்கை வேளாண்மையின் திசைகாட்சி என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.





















