Madras Highcourt: வாகன பதிவெண்கள் வழக்கு - நீதிபதிகளையே கோபமடைய செய்த மனுதாரர்...! நடந்தது என்ன..?
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் புகைப்படங்கள் ஏதேனும் ஒட்டப்பட்டு இருந்தால், பறிமுதல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO), நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வாகனங்களின் நம்பர் பிளேட்டில், விதிமுறைகளை மீறி தெய்வங்கள், அரசியல் கட்சி சின்னங்கள் உள்ளிட்ட படங்கள் இருந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு:
கரூரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன உரிமையாளர்கள் , கடந்த ஆண்டு மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு, அரசு வழங்கியுள்ள அளவு மற்றும் வடிவில் நம்பர் பிளேட்களை பயன்படுத்துவதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், பொதுமக்கள் தங்களது வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப தங்களின் அபிமான அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையோ , அரசியல் கட்சிகளின் சின்னங்களையோ , விருப்பமான தெய்வங்களின் புகைப்படங்களையோ அல்லது திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களையோ பெரிதாக பதிவிட்டுக்கொள்கின்றனர் எனவும் கவலை தெரிவித்து இருந்தார்.
கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பதிவெண்களை மிகவும் சிறியதாக பதிவிட்டுக் கொள்வது முற்றிலும் தவறான செயல் எனவும், கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டவிதி மீறல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார். அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை எனவும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தார்.
வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு:
இந்த பொதுநல மனு நீதிபதிகள், R.மகாதேவன், J.சத்திய நாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிட்டது ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது. இதில் அரசியல் சார்பு இல்லாமல், நடுநிலையுடன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) , உடனடியாக நாள்தோறும், ஆய்வு மேற்கொண்டு இருசக்கர, 4 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில், விதிமுறைகளை மீறி ஏதாவது தெய்வங்கள், அரசியல் கட்சி சின்னங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட படங்கள் ஒட்டப்பட்டு இருந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து கடும் அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மனுதாரர் மீது குற்றச்சாட்டு:
முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கும் போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை. சட்ட விரோத நம்பர் பிளேட்களை அகற்றவில்லை எனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டியதாக சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகள் கோபம்:
இதனை கேட்ட நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ஒரு கோரிக்கை வைக்கும்போது இது போன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கண்டனத்தை தெரிவித்தனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அந்த வரியை நீக்கிவிடலாம் என தெரிவித்தார் . அதற்கு நீதிபதிகள் இதை எளிதாக கடந்து போக முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு இதுபோன்று மனு தாக்கல் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.