சிறைக்கு அழைத்து வரப்பட்ட பேரறிவாளன்...! பரோலை நீட்டித்த தமிழக அரசு...!
பேரறிவாளன் பரோல் முடிந்து சிறைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்ட நிலையில், அவரது பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆட்சியில் அதற்கான சட்டமசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அந்த சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். இதனால் அவர்களின் விடுதலை தாமதம் ஆனது. இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்பேரில் 30 நாட்கள் பரோல் கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேலூர், வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், அவரது பரோல் காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரை போலீசார் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்து வருவதற்காக அவரது வீட்டில் இருந்து வாணியம்பாடிக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது, பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைக்கு அழைத்துவரச் சென்ற போலீசார், பின்னர் பேரறிவாளனை மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
1991-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு 26 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ந் தேதி முதல்முறையாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பரோல் வழங்கப்பட்டது. உடல்நலம் குன்றிய தனது தந்தை குயில்தாசனை காணச்சென்ற பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2019-ஆம் ஆண்டு அவரது சகோதரியின் மகள் திருமணத்திற்காக நவம்பர் 12-ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பின்னர், பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலனை கருத்தில் கொண்டு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, மூன்றாவது முறையாக கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு காரணமாக 30 நாட்களும், பின்னர் மேல் சிகிச்சைக்காக 14 நாட்களும் என டிசம்பர் 7-ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக பரோல் வழங்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வழங்கியுள்ளது. இந்த பரோல் தற்போது மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.