கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்; பீதியில் மக்கள்
கர்நாடக எல்லைக்குள் விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லைக்குள் வந்து விளை நிலங்களை துவம்சம் செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடக வனப்பகுதி மற்றும் அஞ்செட்டி பனை ஏரியை ஒட்டியுள்ள குந்துக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.
ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள யானைகள் பன்னெர்கட்டா (கர்நாடகா) வனப்பகுதிக்கு செல்லாமல் ஜவளகிரி வனப்பகுதி ஒட்டியுள்ள மாருப்பள்ளி, சொள்ளேபுரம், பனசுமான தொட்டி என கிராமங்களில் ஆங்காங்கே பிரிந்து சுற்றி திரிகின்றன.
அந்த யானைகள் தேன்கனிக்கோட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் பல குழுக்களாக பிரிந்து கண்டகானப்பள்ளி, உச்சனப்பள்ளி கிராமத்தில் புகுந்த யானைகள் ராகி, சோளம், முட்டைகோஸ், கொள்ளு என பயிர்களை தின்றும், காலால் மிதித்தும், மேலும் அங்கு சொட்டுநீர் பாசன பைப்லைன்களை உடைத்தும் நாசம் செய்துள்ளன.
தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் சானமாவு பகுதியில் 15 யானைகளும் உள்ளன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தகுந்த நிவாராணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
யானைகள் மீண்டும் படையெடுப்பால் கிராம பகுதியில் பரப்பரப்பும் பொதுமக்களிடையே பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.