Online Rummy : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா; முதலமைச்சர் நாளை சட்டபேரவையில் மீண்டும் தாக்கல் செய்து உரை..!
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நாளை மீண்டும் சட்டபேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை (மார்ச், 23) மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தடை மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார். ஏற்கனவே ஒரு முறை ஆன்லை சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தமிழ்நாடு அரசு போதிய விளக்கங்கள் அளிக்கவில்லை என கூறி திருப்பி அனுப்பியது பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தமிழ்நாடு அரசியலில் ஏற்படுத்தியது.
இதற்கு முன்னர் அதாவது நேற்று (மார்ச்,21) பாராளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை உறுப்பினர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில், “ ஆன்லைன் சூதாட்டங்களை தங்கள் வரம்பிற்குள் கொண்டு வர சட்டமியற்ற அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் 34வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசுகளே இயற்ற முடியும் என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், ‘சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன. திறமை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கு வேறுபாடுகள் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு திறன் வகுக்கப்பட்டுள்ளது என்றால் அது திறன் விளையாட்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளை சூதாட்டம் என்றே இந்திய சட்டங்கள் வரையறுத்துள்ளன.” என தனது பதில் உரையில் அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மார்ச் ஒன்றாம் தேதி தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி திமுக மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இதற்கு முன்னர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்கப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்" என உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.