“நான் விசுவாசமற்றவனா? அதை பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை” - கொந்தளித்த ஓபிஎஸ்
அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள்.
துரோகம், பொய்மை, வன்முறை, செய்நன்றி மறத்தல் ஆகியவற்றின் மொத்த உருவமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு அம்மா ஜெயலலிதா பேசியுள்ளார்கள். அதை மக்களும் அறிவார்கள். அதைப்பற்றி பேச பத்துத் தோல்வி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்” எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் பொய்மையின் மொத்த உருவம் ‘துரோகி’ திரு. எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம். pic.twitter.com/fP9apjoxvQ
— O Panneerselvam (@OfficeOfOPS) July 8, 2024
மேலும், “வெறும் 3 விழுக்காடு ஆதரவு இருந்த எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் கொடுத்ததாக இபிஎஸ் சொல்கிறார். ஆனால் நான் தர்ம யுத்தம் நடத்தியபோது 42 விழுக்காடு ஆதரவு இருந்தது. தொடர்ந்து கோயம்புத்தூரில் எனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து இபிஎஸ் பெற்ற முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலுமணியையும் தங்கமணியையும் தூதுவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்த பதவியும் கேட்கவும் இல்லை. கேட்கவும் மாட்டேன். இபிஎஸ் பதவி வெறி பிடித்தவர். இபிஎஸ்சுடன் சேர எனக்கு மனமில்லை என்றாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்ற அம்மாவின் வார்த்தைக்காக இணைவதற்கு முடிவெடுத்தேன்.
பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரிலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றேன். எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.
கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி” என குறிப்பிட்டுள்ளார்.