Seeman Tweet | "திராவிடம் என்றால் எரியத்தான் செய்கிறது" - சீமான் காட்டமான பதிவு..!
திராவிடம் என்றால் எரியத்தான் செய்கிறது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த வாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு சங்க இலக்கியங்களை சந்திப்பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியிடாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, திராவிடத்தை எதிர்க்கிறார்கள் என்று சீமானுக்கு கண்டனங்கள் குவிந்தது.
இந்த நிலையில், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திராவிடத்திற்கு எதிரான கருத்துக்களை பேட்டியாக அளித்தார். மேலும், தனது கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் சீமான் வெளியிட்டுள்ளார்.
திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக்கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்! pic.twitter.com/hCeN9np2TX
— சீமான் (@SeemanOfficial) September 5, 2021
அவர் வெளியிட்ட பதிவில், திராவிடம் என்றால் எரிகிறதா? என்கிறார்கள். ஆம்! எரிகிறதுதான். ஐம்பதாண்டுகளாக இந்த மண்ணை ஆளக் கொடுத்ததற்கு, இலஞ்சம்-ஊழலில் பெருத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, எங்கள் நிலத்தின் வளம் யாவற்றையும் அழித்தததைப் பார்க்கும்போது ஒரு தூய தமிழ்மகனுக்கு நெஞ்சும், வயிறும் எரியத்தான் செய்யும்!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”சங்க இலக்கியத் தொகுப்பையும், திராவிட களஞ்சியத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சங்க இலக்கியங்களை இக்கால தலைமுறையினர் புரிந்துகொள்வதற்காக சந்தி பிரித்து செம்பதிப்புகளாக வெளியிடுவது ஒரு அறிவிப்பு என்றும், திராவிட ஆய்வுக்கட்டுரைகள், கால்டுவெல் காலம் முதல் அஸ்கோ பர்ப்போலோ, பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கியவை திராவிட களஞ்சியங்களாக ஒரு அறிவிப்பு” என்றும் விளக்கம் அளித்தார்
ஆனாலும், சில தரப்பினர் தி.க. மற்றும் திராவிட கட்சிகளின் கொள்கைகளை அரசு செலவில் வெளியிடுவது தேவையற்றது. இதை திமுகவின் செலவிலே வெளியிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.