Nithyananda: நீதிமன்றத்துக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: கொந்தளித்த நீதிபதி
நித்யானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது, ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை என நீதிபதி காட்டமாக பேசியுள்ளார்.
நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா சீடர் மீது வழக்கு:
நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.இந்நிலையில், இவர் மீது கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு என்னவென்றால் , “ தேனி அருகே உள்ள நிலத்தில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவதாக கூறி நித்யானந்தா சீடர் சுரேகா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இது நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக வழக்கப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன் ஜாமீன் கோரி மனு:
இந்த வழக்கில், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என சுரேகா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , நித்யானந்தாவின் சீடர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது, சுரேகாவுக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என நித்யானந்தாவின் ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்தார்.
”பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள்”
அப்போதுதான் நீதிபதி, கோபமடைந்தார் “ நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார் என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதலில் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லுங்கள்.
நித்தியானந்தாவின் சொத்துக்களை, இந்திய நீதிமன்றம் பாதுகாக்க வேண்டுமா எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சுரேகா தரப்பில் எதிர்தரப்பினருக்கு தொந்தரவு ஏதும் கொடுக்க மாட்டேன் என்றும், இட ஆக்கிரமிப்புகளில் ஈடுபட மாட்டேன் என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் முன்ஜாமீன் குறித்து பரீசிலிப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்து, நாளை வழக்கை ஒத்திவைத்தது.