Nilgiris Rain: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
நீலகரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையால் 13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. நேற்றைய தினம் வட தமிழ்நாடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
ஜூலை 14 மற்றும் 15 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதியை பொறுத்தவரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
நீலகிரியில் தொடர் மழை
இந்நிலையில் தொடர் மழைக்காரணமாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்கள் மாவட்டத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எனவே இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும்,பகல் நேரங்களிலும் தேவையில்லாமல் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும்,காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அறிவுறுத்தியுள்ளார்.