Tiruchendur: திருச்செந்தூரில் இரவு தங்க அனுமதி இல்லை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது. இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் இரவு நேரத்தில் பக்தர்கள் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகனின் இரண்டாம் படை வீடு
தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது. இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகன் சூரபத்மனை வதம் செய்த இடம், தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம், அறுபடை வீடுகளில் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் கடற்கரை சார்ந்த தலம் என பல சிறப்புகளை திருச்செந்தூர் பெற்றுள்ளது.
இந்த முருகன் கோயிலுக்கு தினசரி உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தங்கி சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்து வழிபடுகின்றனர். இதனால் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும், திருநெல்வேலியில் இருந்து பாசஞ்சர் ரயில்களும், மற்ற ஊர்களில் இருந்து பேருந்துகளும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர்.
பௌர்ணமி நாளில் குவியும் பக்தர்கள்
இதனிடையே ஜோதிடர் ஒருவர் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் இரவில் திருச்செந்தூர் கடற்கரையில் நிலவொளியில் தங்கி மறுநாள் அதிகாலை புனித நீராடி சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு கடற்கரையில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
இதற்கு பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நம்பிக்கையை குறை சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் இதுபோன்ற தகவலை நம்பி கைக்குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை அழைத்து வந்து சிரமப்படுவதை காண முடியவில்லை என பலரும் வேதனை தெரிவித்தனர்.
இனிமேல் அனுமதியில்லை
இந்த மக்கள் திரள்வதை பயன்படுத்தி திருச்செந்தூரில் அடிக்கடி திருட்டு சம்பவமும் அதிகரித்துள்ளதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்த ஆலோசனையின்படி, இனிமேல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு (நவம்பர் 7) கடற்கரையில் தங்கியிருந்த பக்தர்களையும், அவர்களின் உடமைகளையும் கோயில் பணியாளர்கள் அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி அப்புறப்படுத்தினர்.





















