New Year 2025: புத்தாண்டுக்கு புதுச்சேரி போறீங்களா... அப்போ இத நோட் பண்ணிக்கோங்க...!
New Year 2025 Pondicherry: இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் நாளை 1ம் தேதி காலை 6:00 மணி வரை, நகர பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும், சாலையில் வாகனங்களை நிறுத்தவும் தடை.
புதுச்சேரி: இன்று இரவு புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கடற்கரைகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நகர மற்றும் கடற்கரை சாலையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கு, டிராபிக் என ஒட்டுமொத்தமாக 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் டிராபிக் பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு குறித்த விளக்ககூட்டம், ஆசிரமம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.
ஐ.ஜி., அஜித்குமார் சிங்கள தலைமை தாங்கினார். டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட ஆலோசனைக்கு பின்பு போலீசார் கூறியதாவது;
இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் சாலையில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிமாக மூடப்படும். மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்லும் வாகனங்கள் செயின்ட் ஆஞ்சே வீதி, சூர்கூப் வீதி வழியாக அனுமதிக்கப்படும்.
கடற்கரை ஒட்டிய ஒயிட் டவுன் பகுதியில் உள்ள தேவாலயங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் கிழக்கு டிராபிக் எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு பாஸ் பெற்று பயன்படுத்த வேண்டும்
10 இடங்களில் தற்காலிக பார்க்கிங்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரை வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உப்பளம் பெத்திசெமினார் பள்ளி வளாகத்தில் பைக்குகள் மட்டும் பார்க்கிங் செய்ய வேண்டும். ஆம்பூர் சாலை, மிஷன் வீதி இடையே உள்ள அனைத்து சாலைகளில் தெற்கு பக்கம் பைக் நிறுத்தலாம்.
உப்பளம் புதிய துறைமுகம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், பாண்டி மெரினா, பழைய பஸ் நிலைய நகராட்சி வளாகம், நேரு வீதி பழைய சிறைச்சாலை வளாகம், மறைமலையடிகள் சாலை புதிய பஸ் நிலையம், பாரதிதாசன் மகளிர் கல்லுாரி வளாகம், வாசவி இன்டர்நேஷ்னல் பள்ளி, கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளியில் வாகன பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்க்கிங் இடத்தில் இருந்து கடற்கரை சாலை செல்ல பி.ஆர்.டி.சி., மூலம் 30 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கட்டணம் இன்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம்.
வாகனம் நிறுத்த தடை
இன்று 31ம் தேதி மதியம் 2:00 மணி முதல் நாளை 1ம் தேதி காலை 6:00 மணி வரை, நகர பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும், சாலையில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாண்டி மெரினா செல்லும் மக்கள், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதான உட்புற சாலையை பயன்படுத்தி வம்பாக்கீரப்பாளையம் சாலை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.
போலீசாருக்கு உயர் அதிகாரிகள் கூறிய அறிவுரைகள்:
போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகள் பேசாதீர்கள். விவாதம், சண்டையிடும் செயல்களில் ஈடுப்பட கூடாது. பெண்களை கேலி, கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுங்கள். சுற்றுலா பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்டால் உயர் அதிகாரிகளை அழைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பார்க்கிங் இடங்களை வழிகாட்டுங்கள். பணியின்போது மொபைல்போன் பார்ப்பதை தவிர்க்கவும். கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதால் மொபைலில் நெட்வெர்க் கிடைக்காது. எனவே, வயர்லெஸ் பயன்படுத்துங்கள்.
கேளிக்கை நிகழ்ச்சிகள், மதுபார்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நடத்த அனுமதி கிடையாது. கடலில் யாரும் குளிக்க கூடாது. புத்தாண்டில் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டால் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருடன் 600 ஊர்காவல்படையினர், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் 400 பேர் பணியில் ஈடுப்படுவர். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க திடீர் வாகன சோதனைகள் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய பல்வேறு சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.