NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்..!
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
கடந்தாண்டு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. நீட் தேர்வு சமூக நீதியை உறுதி செய்வதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது. இது மட்டுமின்றி, நீட் தேர்வை திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி( நேற்று முன்தினம்) தமிழக அரசுக்கு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறும் சபாநாயகரை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தி.மு.க. எம்.பி. வில்சன் ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்புவோம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தபிறகு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நீட் தேர்வுக்கு எதிராக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
தமிழக அரசு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றியபோது தமிழ்நாட்டின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவிவகித்தார். கடந்தாண்டு செப்டம்பர் 18-ந் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் தேர்வு விலக்கு மசோதா மீது மேல்நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
ஆனாலும், அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆளுநரை கண்டித்து வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு முன்பு தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்