Nagarajan IAS: ‛மிஸ்டர் கிளீன்... மிஸ்டர் கூல்...’ எங்கு சென்றாலும் மக்கள் மனதை வெல்லும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்!
81 நாட்களே கோவையில் ஆட்சியராக நாகராஜன் பணியாற்றி இருந்தாலும், தனது பணிக் காலத்தில் எடுத்த நடவடிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.நாகராஜன் ஐஏஎஸ் நில நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக வெறும் 81 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், நாகராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்!
அரசியல் சார்பு இல்லாத நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த நாகராஜன், கோவை மாவட்ட ஆட்சியராக தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியராக இருந்த ராஜாமணி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தேர்தல் ஆணையம் கோவை ஆட்சியராக நாகராஜனை நியமித்தது. இதற்கு முன்பாக இதே போல தேர்தல் சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக உயர் நீதிமன்றம் இவரை நியமித்துள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு மதுரை மக்களவை தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வட்டாச்சியர் சம்பூரணம் உள்ளிட்டோர் உள்ளே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரனை செய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாகராஜனை, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமித்தது. இதன் பின்னர் எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அதிகாரியாக நாகராஜன் நடத்தி முடித்தார்.
பணியில் மிஸ்டர் கூல்...
கோவை மாவட்ட ஆட்சியராக கடந்த மார்ச் 25 ம் தேதி நாகராஜன் ஐஏஎஸ் பதவியேற்றுக் கொண்டார். தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிய அவர், சட்டப் பேரவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் திறம்பட நடத்தி முடித்தார். நடிகர் கமல்ஹாசன், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களால் கோவை அதிக கவனம் பெறும் பகுதியாக இருந்தது. அப்போது எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் சவாலான தேர்தல் பணிகளை திறம்பட நிறைவு செய்தார்.
வெளிப்படை தன்மை கொண்டு வந்தார்!
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கொரோனா பெருந்தொற்று, பெரும் சவாலாக உருவெடுத்தது. மே மாதத்தில் கோவையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை முதலிடம் பிடித்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இத்தகைய இக்கட்டான சூழலில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக வெளியிட செய்தார். இதேபோல தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு செக்!
கொரோனா சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் வந்ததும், சிறப்பு குழு நியமித்து விசாரணை மேற்கொண்டார். ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதித்தார். பிரபலமான இரு மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தார். கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நாளில் இரவு நேரத்தில் நாகராஜன் பல மணி நேரம் அமர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து நோயாளிகளின் உறவினர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதுபோன்ற திடீர் நடவடிக்கைகளால் அதிகாரிகளை பணி செய்ய முடக்கி விட்டார்.
வன நிலங்களை மீட்ட மீட்பர்!
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வனச் சட்டத்தின் பிரிவு வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1049 ஹெக்டேர் நிலங்களை வன நிலங்களாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக 1,22,215.13 ஹெக்டர் ஆக இருந்த கோவை மாவட்டத்தின் வனப்பரப்பு, 1,23,264. 87 ஹெக்டர் ஆக உயர்ந்தது. இதேபோல கல்லார் யானை வலசைப் பாதையை பாதுகாக்கும் நடவடிக்கையாக, அப்பகுதியில் வனத்துக்கு நடுவே அமைந்து இருக்கும் சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாக்க உத்தரவிட்டார். இவற்றை ஒரே மாதத்தில் சாத்தியப்படுத்திய கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனின் நடவடிக்கைக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பாராட்டு தெரிவித்தார். அதேபோல பல்வேறு சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் வரவேற்பை பெற்றது.
செங்கல் சூளைகளால் வந்த அழுத்தம்!
தடாகம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதியின்றி இயங்கிய செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த செங்கல்சூளைகளில் செங்கல்களை எடுத்துச் செல்ல அழுத்தங்கள் வந்த போதிலும், அதற்கு செவி சாய்க்காமல் இருந்தார். பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பணிகளை செய்ய அரசு அதிகாரிகளை முடக்கி விட்டார். அழுத்தம் அவருக்கு புதிதல்ல. கடந்த ஆட்சியில் தற்காலிக ஆட்சியராக மதுரையில் பொறுப்பேற்ற போது பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த அங்கன்வாடி பணியிடங்களை, சிபாரிசு கடிதங்களை தூக்கி எறிந்து, மெரிட் முறையில் ஒரே இரவில் நியமித்து மறுநாள் டிாரன்ஸ்பர் ஆணையை பெற்றார். ஆளும் தரப்பை பெரிய அளவில் புலம்ப வைத்த நடவடிக்கையாக அது பார்க்கப்பட்டது. லட்சங்களை கொடுத்து பணியிடத்திற்கு காத்திருந்தவர்களை ஓரங்கட்டி, தகுதியானவர்களுக்கு பணியிடம் ஒதுக்கினார். இது போன்ற செயல்களாலேயே அவர் செல்லும் இடங்களில் நாட்கள் கணக்கில் தான் பணிபுரிவார். அந்த வரிசையில் 81 நாட்களே கோவையில் ஆட்சியராக பணியாற்றிய நாகராஜன், தனது பணிக் காலத்தில் எடுத்த நடவடிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்.