EPS: ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
EPS : ஓப்பந்த செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. (அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்)-இன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்ற அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதார துறை அறிவிப்பு :
கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தபட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ஆக 14,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இவர்களுக்கு மருத்துவ பணிகள் கழகம் சார்பாக பணியில் நியமனம் செய்யப்பட்டார்கள், அவர்களின் பணி காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அனைவருக்கும் பணி நியமனம் செய்யப்படும் என எதிர்பாரக்கப்பட்டது. இந்த நிலையில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமனைகளில் அனுமதித்து, அவர்களுக்கு சேவையாற்ற தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும் MRB எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் முன்களப் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினர், தற்போது அவர்களுக்கு பணி நிரந்தரம் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் விவரம்:
அப்படி தன்னலம் கருதாது, தங்களது உயிரை துச்சமென மதித்து பணியில் இணைந்த ஒப்பந்த செவிலியர்கள், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழு கவச உடையணிந்து, மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், தங்களை வருத்திக்கொண்டு தன்னவம் கருதாது கடமையாற்றினார்கள்.
ஒப்பந்த மருத்துவர்களும், ஒப்பந்த செவிலியர்களும் கொரோனா நோய்த் தொற்றின்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அழைக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களிடம் அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள், உங்களது தன்னலம் கருதாத சேவை அம்மாவின் அரசுக்கு நன்கு தெரியும். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்போது, உங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மா அரசின் சார்பாக நம்பிக்கை அளித்து அவர்களது பணியினை ஊக்கப்படுத்தினார்.
மக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறைகளில் மிக முக்கியமான துறை மருத்துவத் துறை. எங்கள் ஆட்சியில் இந்தியாவின் முதன்னம மருத்துவ மாநிலமாகத் திகழ்ந்தது தமிழ் நாடு. முக்கியமாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தனர். அகில இந்திய அளவில் மருத்துவத் துறையில் முதலிடம் வகித்ததோடு, பல விருதுகளைப் பெற்று முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்தது.
முக்கியமாக, கொரோனா நோய்த் தொற்றின்போது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பாராட்டினார். அவரது இந்தப் பாராட்டிற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களும் என்றால் அது மிகையல்ல.
மேலும், கொரோனா நோய்த் தொற்றின்போது. தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கியபோது,
சுமார் 80 முதல் 90 சதவீதம் வரையிலான கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நாடியது அனைவரும் அறிந்த உண்மை. இவ்வாறு தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களையும், ஒப்பந்த செவிலியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் நட்டாற்றில் விட்டது இந்த விடியா அரசு.
எனது தலைமையிலான அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளுக்கு சுமார் 1,820 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கொரோனா நோய்த் தொற்றின்போது தன்னலம் கருதாது கொரோனா நோயாளிகளுக்காகப் பணியாற்றிய இந்த ஒப்பந்த மருத்துவர்களை வீட்டிற்கு அனுப்பிய இந்த விடியா அரசு இன்று தன்னலம் கருதாது பணிபுரிந்து வந்த ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று வீட்டிற்கு அனுப்பியுள்ளது இந்த அரசு.
என்று குறிப்பிட்டு இருந்தார்.





















