Udhayanidhi Stalin: உதயநிதியின் பவுன்சர்கள் அடாவடி.. செய்தியாளர்களுக்கு மிரட்டல்.. நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது பவுன்சர்கள் செய்தியாளர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்களின் அடாவடியால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த செய்தியாளர்களை பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளில் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி பவுன்சர்கள் அட்டகாசம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகளில் காவல்துறை பாதுகாப்பு மட்டுமல்லாமல் தற்போது பவுன்சர்கள் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்தமாதம் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது, அமைச்சர் உதயநிதியை பார்க்க அவரது கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முண்டியடித்தனர். பாதுகாப்பிற்காக வந்திருந்த பவுன்சர்கள் அவர்களை உள்ளே விட மறுத்து தடுத்து நிறுத்தினர்.
உச்சகட்டமாக, திமுக எம்.எல்.ஏக்களான இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார் ஆகியோரை தடுத்து நிறுத்திய பவுன்சர்கள், “எம்.எல்.ஏன்னா முன்னாடியே வரவேண்டியது தானே. இப்போ வந்தா எப்படி உள்ளே விட முடியும்? என்று திமிராக மிரட்டினர். கடும் வாக்குவாதத்திற்குப் பின்னரே எம்எல்ஏக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கட்சி எம்.எல்.ஏக்களுக்கே இந்த நிலை என்றால் தொண்டர்கள் நிலையை கேட்கவா வேண்டும்?
செய்தியாளர்களுக்கு மிரட்டல்:
இன்று மயிலாடுதுறையில் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பவுன்சர்கள் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மக்களின் குறைகளை தெரிவிக்கும் உதவி எண் மற்றும் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட செய்தியாளர்கள் சிலர் தவிர மற்றவர்கள் யாருக்கும் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை என்று கூறி செய்தியாளர்களை பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர்.
வாக்குவாதம்:
தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியாக திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவிலும் உதயநிதி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியிலும் செய்தியாளர்களை பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்த பவுன்சர்கள் செய்தி எடுக்க விடாமல் தடுத்ததோடு, தகாத வார்த்தைகளில் மிரட்டியுள்ளனர். இதனால் செய்தியாளர்கள் - பவுன்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கட்சி விழாக்கள் உட்பட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க தமிழக காவல்துறை இருக்கும்போது தனிப்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சருக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா அல்லது தன் கட்சித் தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லையா..? போலீஸ்காரர்களைப் போன்ற அதிகாரத்தை இந்த பவுன்சர்களுக்கு கொடுத்து திமிர் காட்ட சொல்வது யார்..?
தன் சொந்த கட்சியின் எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுக்கும் இந்த பவுன்சர்கள் பற்றி உதயநிதிக்கு தெரியுமா..? என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் அமைச்சர் உதயநிதி? என அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முதன் முறை அமைச்சர், இளம் அமைச்சர் என்றாலும் துடிப்புடன் செயல்படும் உதயநிதிக்கு இதுபோன்ற பவுன்சர்களால் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதே திமுக தொண்டர்களின் மனநிலை.