Erode Election: தமிழர்கள் நலனை அடகு வைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்வம் - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குட்கா, போதை பொருள்களை பற்றி பேசினால் எனக்கு ‘ருத்ராட்ச பூனைகள்’ ஞாபகம் வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்காக தி.மு.க. கூட்டணியினரும், அ.தி.மு.க. கூட்டணியினரும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்:
நேற்றைய தினம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கலெக்ஷன், கரப்பசன் மற்றும் கமிஷன் தானில் சூப்பர் முதல்வர் என ஸ்டாலின் பெயர் பெற்றுள்ளார்.
அதிக நிதி யார் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் சிறந்த அமைச்சர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை அரசு அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும். திமுக அமைச்சர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது. தேர்தல் பரப்புரை செய்யும் அமைச்சர்கள் அங்கே கிடா விருந்து போட்டு வருகின்றார்கள். திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்.
அது உங்கள் பணம் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினை சீர்குலைத்து வருகிறார். அதிமுக பெற்று எடுத்து குழந்தைக்கு திமுக பெயர் மட்டுமே சூட்டி வரும் நிலை உள்ளது என அடுக்கடுக்கான விமர்சனத்தை முன்வைத்தார். இது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழர்களின் நலன் அடகு:
அப்போது, “ஊழலின் மொத்த உறைவிடமாக அதிமுக ஆட்சி அமைந்திருந்தது. இதன் காரணமாகவே அக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. இடைத்தேர்தல் முடிவுகளை அறிந்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் உள்ளார். நிச்சயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார்” என தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், “ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் நான் தெரிந்துக்கொண்டேன் என்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொல்லும் அளவுக்குதான் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்தது. தமிழர்களின் நலன்களை அடகு வைப்பதில் ஆர்வம் காட்டுபவராக பழனிசாமி இருந்தார்
எனவே அதிமுகவினர் எத்தனை முகமூடிகளை போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்தாலும், இந்த ஈரோடு இடைத்தேர்தல் பூகம்பத்தில் அதிமுக இருக்கக் கூடிய இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி” என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.