Metro Trains: மெட்ரோ ரயிலில் இறைச்சி கொண்டு செல்லத் தடை.. பயணிகள் எதிர்ப்பு.. மெட்ரோ நிர்வாக விளக்கம் என்ன?
சென்னை மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீன் உள்ளிட்ட சமைக்கப்படாத இறைச்சி பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீன் உள்ளிட்ட சமைக்கப்படாத இறைச்சி பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட தனிநபர் வாகனங்களோடு, பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் ரயில், பறக்கும் ரயில் ஆகியவற்றோடு குளிரூப்பட்ட வசதி கொண்ட மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலுக்குள் இறைச்சி, மீன் உள்ளிட்ட சமைக்கப்படாத பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமைக்கப்படாத இறைச்சியுடன் வரும் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.
மெட்ரோ ரயில் வண்டி டிக்கெட் விதிகள் 2014-ன் படி இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி உயிரிழந்த பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் ஆகும். அதேபோல உயிருள்ள விலங்குகள் மற்றும் பறவைகளையும் மெட்ரோவில் எடுத்துச் செல்லக்கூடாது. இவை அனைத்து மெட்ரோ ரயில்களிலும் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் இதற்குப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பெங்களூருவில் பயணி ஒருவர் சமைக்கப்படாத மீனை ரயிலில் கொண்டு சென்றார். இதை அடுத்து, ரயில் நிலைய நுழைவு வாயிலிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். உறையில் இட்டு சரியாக பேக் செய்யப்பட்டிருந்த போதும் தான் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
அதில், மெட்ரோ ரயில்களில் இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சரியாக பேக் செய்யப்பட்டு, சீல் இடப்பட்ட உணவுகளைக் கொண்டுசெல்லத் தடை ஏதும் இல்லை. அதே நேரத்தில் கசிவு ஏற்படும் இறைச்சி வகைகள், துர் நாற்றத்தை உருவாக்கும் இறைச்சி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களிலும் முறையாக பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
2.2 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தின்படி, சென்ட்ரல்- பரங்கிமலை, சென்ட்ரல்- விமான நிலையம் மற்றும் விம்கோநகர்-விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சராசரியாக தினமும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்து பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.