பொண்ணுங்க எதிர்த்து பேசினால் பொறுக்கியா.. தப்பு தப்பா கமெண்ட் பன்றீங்க.. சினேகா மோகன்தாஸ்
ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் மகளரணி நிர்வாகி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் அருகே மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி நிர்வாகி சினேகா மோகன் தாஸ் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலணியால் ஆட்டோ டிரைவரை தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து சினேகா மோகன் தாஸ் மீது மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மகளிரணி நிர்வாகியாக இருப்பவர் சினேகா மோகன்தாஸ் (32). இவர், நேற்று வாடகை ஆட்டோவில் சைதாப்பேட்டையில் இருந்து சாந்தோமுக்கு தனது தோழியுடன் சென்றிருக்கிறார். ஆட்டோவை பிரசாந்த் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில், டிரைவரான பிரசாந்த் ஆட்டோவை கண்மூடித்தனமாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது சினேகா அவரிடம் ஏன் ஆட்டோவை இப்படி ஓட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவர் தரக்குறைவாக பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சினேகா மோகன்தாஸ் ஆட்டோ டிரைவரை செருப்பால் அடிக்க சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், சினேகா மோகன்தாஸ் தொடர்பான வீடியோ வெளியானதால் சமூகவலைதளங்களில் அவரை தரக்குறைவாக பேசி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாகவும், நடந்தது என்ன என்பதை விளக்கும் விதமாக சினேகா மோகன்தாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதுவே உங்க அக்காவுக்கோ தங்கச்சிக்கோ நடந்திருந்தா இப்படித்தான் கமெண்ட் பண்ணிருப்பீங்களா? நேத்து வெளியான வீடியோவை பாத்திருப்பீங்க. இங்கே நிறைய மீடியாக்கள் தவறான விதமாக சித்தரிச்சு செய்தி போடுறாங்க.
நான் அடிச்சது மட்டுமே அந்த வீடியோவில் வந்திருக்கே தவிற ஆட்டோ டிரைவர் பேசியது, அவர் தப்பா நடந்துக்கிட்டதை தெளிவா காட்டாம இருக்காங்க. அந்த ஆட்டோ டிரைவர் மேப் ஆப் பண்ணிட்டு, எங்களை கண்ணாடியில் ஒரு மாதிரியா பாக்குறதையும் கவனிச்சிட்டு வரோம். அதே மாதிரி ரூட்டையும் மாத்தி மாத்தி போறாரு இதை கேட்டது தான் பிரச்னை ஸ்டார்ட் ஆகுது. ஏன் இப்படி பன்றீங்க கேட்டதுக்கு தான் என்னங்கடி தகாத முறையில் பேசுறாரு. பாதி வழியில் எங்களை இறக்கி விட முயற்சிக்கும் போதுதான் நான் சாவியை எடுக்க முயற்சித்தேன். அவர் என் கழுத்துல இடிச்சு தள்ளிவிடுறாரு. மோசமான வார்த்தையால் திட்டவும் தான் நான் அவரை செருப்பால் அடிக்க போனேன்.
பொண்ணுங்க என்றால் பொறுமையாகத்தான் போக வேண்டுமா. செய்யாத தவறுக்கு அடிச்சாலும் அடி வாங்கிட்டு வரணும் எதிர்பாக்குறீங்க. பொண்ணுங்க திருப்பி அடிக்க கூடாதா, ஒரு பொண்ணு செத்தாதான் நல்லவ, அவ எதிர்த்து போராடுனா பொறுக்கி அப்படித்தான நீங்க நினைக்கிறீங்க. வெளியூரில் இருந்து வந்துட்டு ஆட்டம் போடுறீங்களா என்றும் ஆட்டோ டிரைவர் பேசுகிறார். ஆனால் நீங்க என்னை பத்தி தப்பு தப்பா பேசுறீங்க என ஆதங்கத்துடன் சினேகா மோகன் தாஸ் பேசியுள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.





















