உழைப்பால் திரை உலகில் உச்சம் தொட்டவர் விஜயகாந்த்... மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இரங்கல்...
மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக மாற்று அரசியலை முன்வைத்த மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருந்தது, மதிமுக, இடதுசாரிகள், விசிக மற்றும் தமாகா போன்ற கட்சிகள் இருந்த அந்த அணி விஜயகாந்துக்கு 2015 நவம்பரில் அழைப்பு விடுத்தது. முதலில் மறுப்பு தெரிவித்த விஜயகாந்த் பின் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். ஆனால் மக்கள் நல கூட்டணிக்கு தோல்வியே மிஞ்சியது. தற்போது விஜயகாந்தின் மறைவுக்கு மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ இரங்கல்
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
”தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது.
நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரை உலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர்.ஏழை எளிய மக்களுக்கு உதவும் கொடை உள்ளம் படைத்தவர்.தமிழ் மொழி, இன உணர்வுடன் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் ஆதரவு வழங்கினார்.
தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார். சகோதரர் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,தேமுதிக தொண்டர்களுக்கும் ,அவரை நேசிக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் இரங்கல்
விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அவர்களின் மறைவு பெருந்துயரமளிக்கிறது. தனிப்பட்டமுறையில் என்மீதும் விடுதலைச் சிறுத்தைகள் மீதும் பேரன்பைக் கொண்டிருந்தவர். அவரது மறைவு தமிழகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முத்தரசன் இரங்கல்
தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு இனிய பண்பாளர், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்.என இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ (எம் ) இரங்கல்
சி.பி.ஐ(எம்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:” தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது பெரும் அதிர்ச்சியையம், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சாதாரண குடும்ப பின்னணியில் பிறந்த விஜயகாந்த், தனது கடினமான உழைப்பால் திரைப்படத்துறையில் காலடி வைத்து படிப்படியாக உச்சத்தை எட்டியவர். பல திரைப்படங்களில் மக்கள் வாழ்நிலை முன்னேற்றத்திற்காக முற்போக்கு கருத்துக்களை பேசி நடித்து மக்களின் அன்பைப் பெற்றவர். தனது உழைப்பால் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்தவர். நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். தேமுதிக கட்சியை தொடங்கி போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர். எதிர்கட்சி தலைவராக பணியாற்றிய காலத்தில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் வலுவாக முன்னெடுத்தவர். மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முக்கிய பங்காற்றியவர். எளிமையானவர், சிறந்த பண்பாளர், வெளிப்படைத் தன்மையுள்ளவர். அவரது மறைவு தமிழ்நாட்டின் அரசியல் பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை செலுத்துகிறது”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவால் வேதனையுற்ற அவரது இணையரும், தேமுதிக பொதுச் செயலாளருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தேமுதிகவின் தொண்டர்கள் மற்றும் அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.