கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பம்: உசிலம்பட்டியில் சோகம்.. நடந்தது என்ன?
கடன் பிரச்னையால் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பிரச்னையால் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கல்விக் கடன், விவசாய கடன், திருமண தேவைக்கு தொழில் ஆரம்பிக்க என பல்வேறு முக்கிய தேவைகளுக்காகக் கடன் வாங்குபவர்கள், அதை எவ்வாறு மீண்டும் ஈடுசெய்வது என்பது குறித்த தெளிவுடன் இருப்பார்கள். பொதுவாக, இந்த மாதிரியானவர்கள் உயிரை விடும் அளவுக்குக் கடன் தொல்லைக்குள் சிக்கிக்கொள்வதில்லை. ஆனால், மீறி ஆடம்பரச் செலவு செய்பவர்கள்; குடிப்பழக்கம், போதைப் பழக்கம், மோசமான வழிகளில் பணத்தைச் செலவழிப்பவர்கள், எதிர்பாராவிதமாக தொழிலில் பெரும் நஷ்டம், குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் அவரைக் காப்பாற்ற சக்திக்கு மீறி கடன் வாங்குபவர்கள்... இவர்களைப் போன்றவர்கள்தாம் கடன் தொல்லையிலிருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்வதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தற்கொலை எதற்கும் தீர்வில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் நகைப்பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை ஒன்றை நடத்திவருகிறார். இவர் தொடர்ந்து கடன் பிரச்சனையில் இருந்துவருதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த சரவணன் இன்று காலை வழக்கம்போல எழுந்து வீட்டுக்கு வெளியேவந்து அமர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
நீண்டநேரம் ஆகியும் சரவணன் அவரது குடும்பத்தினர் எவரும் வெளியே வரவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சரவணனின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சரவணன், அவரது மனைவி விஜி மற்றும் மகள்கள் மகாலட்சுமி, அபிராமி மற்றும் மகன் அமுதன் என்ற ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி ராஜன் தலைமையிலான காவல்துறையினர் வந்து சோதனை நடத்தியதில் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடல்கள் அனைத்தையும் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் நம்மிடம்...," சரவணன் தொடர்ந்து கடன் தொல்லையில் இருந்துவந்துள்ளார். தனது குடும்பத்திற்காக எதுவும் சேகரிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் இருந்துள்ளது. இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணை முடிவில் முழுவிபரம் தெரியவரும்" என்றனர்.