ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி! Madras high court on Anna university student case says should not tell girls to not talk to boys ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/27/a71348b58e3a7d5bc68ad6017e7f10fa1735308472848729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக நாளை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை:
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டது சட்டவிரோதம் எனவும் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரை ஒப்புக்கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், அவர் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதிகள்:
கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆனால். பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு குற்றவாளி தான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார் எனவும் கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்த போது, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் காவல் ஆணையர் கூறியுள்ளார் என விளக்கம் அளித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் தப்பி ஓட முயற்சித்ததாகவும் அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதே போல மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனவும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலவி வருகிறார். அதை விசாரித்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினர்.
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)