Madras HC on vijay Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்: விஜய் மேல்முறையீடு மனு நாளை விசாரணை!
நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய் கடந்த 16ஆம் தேதி மேல்முறையீடு செய்தார். நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதிக்கான நுழைவு வரியில் விலக்கு கேட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி எம்.எம்.சுரேஷ் உத்தரவிட்டார். தனிநீதிபதி தீர்ப்புக்கு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ள விஜய் அனுமதி கேட்டிருந்தார். இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி விவகாரத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வருகின்றது.
இந்த வழக்கின் விவரம்:
நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, காருக்கு உரிய நுழைவு வரி செலுத்தும்படி விஜய்க்கு வணிக வரி துறை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, வரி விலக்கு கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, விஜய் சார்பாக இந்த வழக்கை அவரின் வழக்கறிஞர் தொடர்ந்திருந்தார். ஆனால், தாக்கல் செய்த மனுவில், ஜோசப் விஜய் என்று மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. யார் இந்த ஜோசப் விஜய்? அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ற எந்த விபரமும் அதில் குறிப்பிடவில்லை. யார் அந்த விஜய் என்று நீதிபதி கேட்ட பிறகே, அவர் நடிகர் விஜய் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிரபல நடிகராக இருக்கும் விஜய், படங்களில் சமூக கருத்துக்களை கூறும் அவர், தனது தொழிலைக் கூட குறிப்பிடாமல் வழக்கை தொடர்ந்தாரா என்று நீதிபதி கடிந்து கொண்டார். ஏன் இதை மறைக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி எஸ்.எஸ். சுப்ரமணியம், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். மக்கள் செலுத்தும் வரிதான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். சமூக நீதிக்கு பாடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் நீதிபதி அதிருப்தியுடன் கூறினார்.