(Source: ECI/ABP News/ABP Majha)
LGBTQ : தன்பால் ஈர்ப்பாளர்களை எந்த துன்பத்துக்கும் உள்ளாக்காதீர்கள் - சென்னை உயர்நீதிமன்றம்
தன்பால் ஈர்ப்பாளர்களுக்குப் பாலின மாற்று சிகிச்சை வழங்க தடைவிதிக்க வேண்டும் எனவும், அச்செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஆணோ, பெண்ணோ, மாயமான விசாரணையில், அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள் என கண்டறிந்தால், வழக்கை முடித்து, எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.
இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு பெண்களின் பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டார். இதில் இருவரின் பெற்றோரும் பெண்களின் உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும், கவுன்சிலிங்கில் பங்கேற்றார்.
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பால் ஈர்ப்பாளர்கள்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
[BREAKING] Madras High Court bans medical attempts to cure sexual orientation; suggests changes to school curricula to educate students on LGBTQ #LGBT #LGBTQ #Pride2021 #PrideMonth #MadrasHighCourt
— Bar & Bench (@barandbench) June 7, 2021
Story - https://t.co/zsXFIxUOj4 pic.twitter.com/pKLaHA4Y9K
ஆணோ, பெண்ணோ, மாயமானதாக புகார் வந்தால், அதுகுறித்த விசாரணையில் அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின், வழக்கை முடித்து, எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என, காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தன்பால் ஈர்ப்பாளர்களைக் கையாள்வதில் திறமை வாய்ந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, எட்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும், அவர்களுக்கு தேவையான நிதி, சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என, மத்திய சமூக நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்க வசதியாக தங்குமிடங்களை போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ், சிறைத்துறை, நீதித்துறை, கல்வித்துறைகளில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநர்கள் மீது பாலியல் தாக்குதல் நடைபெறாமல் தடுக்க தனியாகச் சிறைப்படுத்த வேண்டும் எனவும், தன்பால் ஈர்ப்பாளர்களுக்குப் பாலின மாற்று சிகிச்சை வழங்க தடை விதிக்கவேண்டும் எனவும், அச்செயலில் ஈடுபடும் மருத்துவர்களின் உரிமங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். பள்ளி – கல்லூரிகளில் ஆண் – பெண் தவிர்த்து பாலின நடுநிலையாளர்களுக்கு என தனி கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், திருநர்கள் தங்கள் கல்வி ஆவணங்களில் பெயர், பாலின மாற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் கொள்கைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வு விண்ணப்பங்களில், ஆண் – பெண் மட்டுமல்லாமல் திருநர்களுக்கான பகுதியையும் சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.