கரூரில் மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்த பிரபல கொலை வழக்கு - நீதிபதி வழங்கிய தீர்ப்பு என்ன?
பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் Oct 6-2021 அன்று அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ரவுடி கொலை வழக்கில் நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனை இரண்டு நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கரூர் மாவட்டம், கருப்பத்துரைச் சேர்ந்த கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (52), பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் துறையின் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பசுபதிபாண்டியன் படுகொலைக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் அவர் விவசாயம் செய்து வந்தார்.
இதனிடையை 2021-ம் ஆண்டு OCT - 06 ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாயத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா சரவணன், சுந்தர், ரவிவர்மா என்கின்ற பாம் ரவி, குமுளி ராஜ்குமார், கருப்பு ரவி, மனோஜ், கார்த்தி, ஜெயராமன் சுரேஷ், நந்தகுமார், கருப்பு குமார் ஆகிய 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருப்பு ரவி தவிர பத்து நபர்களை கைது செய்து, வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை பெற்ற நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருப்பத்தூர் கோபால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா, சரவணன், சுந்தர், ரவி என்கிற பாம் ரவி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், மீதமுள்ள நான்கு நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூரில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து இரு தரப்பிலும் காத்திருந்ததால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.