பயம் வேண்டாம்... கவனம் தேவை! விழுப்புரத்தில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் எச்சரிக்கை !
விழுப்புரம் அருகேயுள்ள சாலையம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் நடமாட்டம் உள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள சாலையம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் நடமாட்டம் உள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தையை பிடிக்க கூண்டு
விழுப்புரம் அருகேயுள்ள சாலையம்பாளையம் ஏரிக்கரை பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வனத்துறையினர் மூன்று இடங்களில் கூண்டு வைத்து, 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். கடந்த மாதம் (நவம்பர்) 21-ம் தேதி, விழுப்புரம் அருகேயுள்ள சகாதேவன்பேட்டை கிராமத்தில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் சிவராஜ், தனது வீட்டின் பின்புறத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதாக விழுப்புரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
கால் தடங்கள் கண்டறியப்பட்டன
இந்தத் தகவலின்பேரில் வனத்துறையினர் உடனடியாக அக்கிராமத்திற்குச் சென்று பல்வேறு பகுதிகளிலும், விவசாய விளைநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாலையாம்பாளையம் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள ஒருவரின் சவுக்கைத் தோப்பில் சிறுத்தையின் கால் தடங்கள் இருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
நேரில் கண்ட மக்கள்
இதையடுத்து, நவம்பர் 26-ம் தேதி சாலையாம்பாளையத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரி பாலகிருஷ்ணன் என்பவர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஏரி வரப்பு பகுதியில் சிறுத்தை நடமாடியதைத் தான் நேரில் பார்த்ததாகக் கிராம மக்களிடம் தெரிவித்தார்.
கூண்டு வைத்து கண்காணிப்பு
இந்தத் தகவலின் பேரில், வனவர் குணசேகரன் தலைமையில் வனத்துறையினர் சாலையாம்பாளையம் கிராமத்தின் பல்வேறு இடங்களிலும், ஏரிப் பகுதியிலும் சிறுத்தையைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர். சுமார் 3 கி.மீ. பரப்பளவு கொண்ட சாலையாம்பாளையம் ஏரிக்கரைப் பகுதிகளில், சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று கூண்டுகளுக்குள்ளும் ஒவ்வொரு ஆட்டையும் கட்டி வைத்து வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
24 மணி நேர சுழற்சி முறை கண்காணிப்பு
வனத்துறையினரில் 12 பேர் கொண்ட குழுவினர் சாலையாம்பாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்தக் குழுவினர் சுழற்சி முறையாக 24 மணி நேரமும் தீவிரமாக ஏரிப்பகுதியைக் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் சகாதேவன்பேட்டை, நல்லரசன்பேட்டை, பனங்குப்பம், கோலியனூர், அற்பிசம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.
வனத்துறை அறிவுறுத்தல்
வனத்துறையினர் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். அதேசமயம், பொதுமக்கள் வெளியே செல்லும்போது கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.





















