Kutralam Falls: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
kutralam Falls: கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கபட்டார்.
கன மழை காரணமாக, குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளத்தால் குற்றால அருவியில் குளிப்பதற்காக வந்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
குற்றால அருவியில் சிறுவன் மாயம்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திடீர் வெள்ளத்தால், அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது, நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயமானார்.
வெள்ளக்காட்சிகள்:
குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், படிப்படியாக நீரின் வேகமும், அளவும் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது, அங்கு இருக்கும் மக்கள் அலறியடித்து கொண்டு ஓடுவதை பார்க்க முடிகிறது.
View this post on Instagram
தேடும் பணி தீவிரம்:
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்தனர். மேலும், அங்கு சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கபட்டார். இந்நிகழ்வானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை:
வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது, தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.