Kodanadu Case: கோடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஈடுபட்டனர் - தனபால் பரபரப்பு பேட்டி
கோடநாடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அனைத்து ஆவணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நபர்களிடம் தான் உள்ளது.
![Kodanadu Case: கோடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஈடுபட்டனர் - தனபால் பரபரப்பு பேட்டி Kodanadu Case: Edappadi Palaniswami, Thangamani, Velumani were involved in the Kodanadu incident says dhanapal TNN Kodanadu Case: கோடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி ஈடுபட்டனர் - தனபால் பரபரப்பு பேட்டி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/05/527e54ebc35c8978d0137ec9e982e7de1693906846590113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோடநாடு கொலை, கொள்ள வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் தனபால் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடநாடு வழக்கில் சிபிசிஐடி எப்பொழுது சம்மன் அனுப்பினாலும், நேரடியாக ஆஜராகி வாக்குமூலத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன். கனகராஜ் கூறிய தகவல்களை அனைத்தும் சிபிசிஐடி காவல்துறையிடம் முழு ஒத்துழைப்புடன் சொல்ல உள்ளேன். கோடநாடு பங்களாவில் இருந்து எடுத்துவரப்பட்ட ஐந்து பைக்களில் மூன்று பைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேசன் மற்றும் மற்ற இரண்டு பைகள் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோரிடம் கொடுத்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.
குறிப்பாக, கனகராஜை மூளைசலவை செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர்கள் பேசியுள்ளனர். அப்போது இத்தனை நாட்களாக சசிகலாவிடம் வேலைபார்த்து உள்ளீர்கள், உன்னை என்ன வாழ வைத்துள்ளாரா? உன்னை வாழ வைக்கிறேன் என்று கூறியதால் கனகராஜ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார். இல்லாவிட்டால் இந்த போன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். கோடநாடு பங்களாவிலிருந்து ஆவணங்கள் எடுத்து வருவதற்காக கனகராஜியிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டது. அதன் பின்னர் தான் சொத்து ஆவணங்கள் குறித்த பைல்கள் எடுத்து வரப்பட்டு சேலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணத்தை கேட்டதற்கு தான் கனகராஜ் தாக்கப்பட்டார்.
கோடநாடு வழக்கில் தன்னிடம் விசாரிங்கள் என்று தானாக முன்வர வேண்டியதுதானே, ஆனால் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டுவது ஏன்?. கோடநாடு சம்பவத்தை எடப்பாடி பழனிசாமி, வெங்கடேஷ், இளங்கோவன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய ஐந்து பேர் தான் முக்கிய நபர்கள், இவர்களுக்கு கீழ் 35 பேர்கள் உள்ளனர். முறையாக திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அப்பொழுது அரசாங்கத்தின் ஒத்துழைப்பு உடன் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோடநாடு வழக்கு தொடர்பாக இதற்கு முன்பாக தன்னிடம் முறையாக விசாரிக்கவில்லை, இப்பொழுது கனகராஜ் கூறிய தகவல் அனைத்தும் முறையாக சொல்ல தயாராக உள்ளேன். அப்போது வாக்குமூலம் கொடுக்க முன்வந்தும் அப்போதிருந்த ஐஜி சுதாகர் தலைமையில் விசாரித்தபோது எனது வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எழுதிய வாக்குமூலத்தில் என்னிடம் கையெழுத்துப் பெற்றனர். அப்பொழுது தன்னை தாக்கிய ஐஜி சுதாகர் கூறுகையில், ’எடப்பாடி பழனிசாமி இடமும் பேசுவேன், தற்போது உள்ள முதல்வருடமும் பேசுவேன்’ என்று என்னை தரைகுறைவாக பேசினார். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது நான் காவல்துறை கண்காணிப்பில் தான் உள்ளேன், எனக்கு இயற்கையாக மரணம் ஏற்பட்டால் பிரச்சனை இல்லை, செயற்கையாக மரணம் ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆவணங்கள் அனைத்தும் அந்த ஐந்து பைகளில் தான் இருந்தது. அந்த பைகளை வைத்து தான் அதிமுகவை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டுக்குள் கட்சியை கொண்டு வந்துவிட்டார். அந்த ஆவணங்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நபர்களிடம் தான் உள்ளது. கோடநாடு வழக்கு தொடர்புடைய சயன் என்பவர் கூலிப்படை. கனகராஜ் தன்னுடைய சகோதரர் என்பதால் அனைத்து தகவலும் எனக்கு கிடைக்கப்பெற்றது. கோடநாடு தொடர்பான உண்மையை மனதில் வைத்திருக்கக் கூடாது, உயிருக்கு ஆபத்து உள்ளதால் இதை தன்னிடம் கூறிவிடலாம் என்று கூறிவிட்டார். தன்னுடைய சகோதரராக இருந்தாலும் சரி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இல்லத்தில் தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். உண்மை வெளிவர வேண்டும். கோடநாடு வழக்கில் என்னை விசாரித்த அனைத்து அதிகாரிகள் பற்றியும் குற்றம்சொல்லவில்லை, ஒரு சில விசாரணை அதிகாரிகளின் பற்றி மட்டுமே குற்றம்சாட்டி உள்ளேன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிபிசிஐடி விசாரணையில் ஆஜராகி ஒத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் சிபிஐ விசாரணைக்கு செல்லட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)