Pamban Bridge: 75 கிமீ வேகம், கடல் மேல் ரயில், தயாரான புதிய பாம்பன் பாலம், திறப்பு விழா தேதி, 111 ஆண்டு வரலாறு
Pamban Bridge: தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை, இந்த மாத இறுதிக்கும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pamban Bridge: தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்துவைப்பார் என கூறப்படுகிறது.
பாம்பன் பாலம்:
ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பாலத்தின் வேகம்:
கட்டுமானம் தொடர்பாக பேசிய திட்டத்தை செயல்படுத்தும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்தின் மூத்த துணை பொது மேலாளர் N ஸ்ரீனிவாசன், “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) பாலத்தின் செங்குத்து லிப்ட் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில் 75 கிமீ வேகத்தில் பயணிக்க அனுமதித்துள்ளார். அதிகபட்சமாக 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள ஒரு வளைவு காரணமாக, CRS மணிக்கு 75 கிமீ வேக வரம்பை அங்கீகரித்துள்ளது. லிப்ட் இடைவெளிக்கு மட்டும், ரயில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
111 ஆண்டுகால வரலாறு:
புதிய பாம்பன் பாலம் ஆசியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என்று அவர் தெரிவித்தார். மேலும், புதிய பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிறகு, 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்றுவதா இல்லையா என்பது குறித்து ரயில்வே முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1914 முதல் 1988 ஆம் ஆண்டு வரை, புனித யாத்திரைத் தலமான ராமேஸ்வரத்திற்கும், பிரபலமான சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கும் இடையேயான ஒரே இணைப்பாக இந்தப் பழைய பாலம் இருந்தது. அதற்கு அடுத்ததாக ஒரு சாலைப் பாலம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1988 ஆம் ஆண்டு சாலைப் பாலம் கட்டப்படும் வரை, மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுக்கும் மண்டபத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பாக ரயில் சேவைகள் மட்டுமே இருந்தன.
5 வருடமாக நடைபெற்ற பணிகள்:
பழைய பாம்பன் பாலம் மூடப்பட்டதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பிரதான நிலப்பகுதியில் உள்ள மண்டபத்திலிருந்து ரயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. புதிய பாலம் கடல்சார் இயக்கத்தை செயல்படுத்த ஒரு மின் இயந்திர அமைப்பு மூலம் இயக்கப்படும், மேலும் பாலத்தை உயர்த்த 5 நிமிடங்கள் ஆகும். அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் காற்றின் வேகம் மணிக்கு 58 கிமீ அல்லது அதற்கு மேல் இருக்கும்போது லிஃப்ட் முறையை இயக்க முடியாது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய பாலத்தின் கட்டுமானத்தில் எஃகு வலுவூட்டல், கூட்டு ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஓவிய அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2019 நவம்பரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் 2020 பிப்ரவரியில் RVNL இன் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இது டிசம்பர் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் 3ம் தேதி, புதிய பாலம் திறக்கப்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

