பெருந்தொற்றுக் காலத்தால் வெறிச்சோடிய கொடைக்கானல் : வேதனையில் சுற்றுலா வணிகர்கள்
கொடைக்கானலில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து ஊரடங்கு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் வேதனை, ரம்மியமாக காட்சியளிக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.
கொடைக்கானலில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து ஊரடங்கு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை உள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோர் வேதனை, ரம்மியமாக காட்சியளிக்கும் கொடைக்கானல் மலைப்பகுதியை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனில் ரம்மியமான காலநிலை நிலவும். மலை முகடுகளின் இடையில் தவழ்ந்து செல்லும் மேகக்கூடங்கள் , ஆங்காங்கே ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் என பசுமைப்போர்த்தியது போல் காட்சியளிக்கும், மலைமுகடுகளையும், சுற்றுலாத்தலங்களையும் காண தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொடைக்கானல் மலைப்பகுதி களைகட்டும். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தமிழக அரசு கோடைவிழா, மலர்கண்காட்சி ஆகியவற்றை நடத்தும்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் கோடை சீசனான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் ஓராண்டுக்கான வருவாயை ஈட்டவேண்டும் என்ற நிலையில்தான் கொடைக்கானலில் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கும் , வியாபாரிகளும் உள்ளனர் . ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்துள்ளனர் . கொடைக்கானல் மக்களுக்கு இது மூன்று மாத இழப்பு அல்ல, ஓராண்டு இழப்பாகவே பார்க்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மே மாத இறுதியில் நடைபெறும் மலர்கண்காட்சி, கோடைவிழா, வாத்துப்பிடிக்கும் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்றவை நடைபெறவில்லை. சென்ற சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டநிலையில் சுற்றுலாபயணிகள் வருகை கனிசமாக இருந்தது. வாழ்வாதாரத்தில் மீண்டுவிட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொடைக்கானல் மக்களுக்கு மீண்டும் தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு, சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல தடை என்ற அரசின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். இந்த ஆண்டாவது கோடைவிழா நடைபெறும், இதில் மலர்கண்காட்சி உள்ளிட்டவை இடம்பெறும், சுற்றுலாபயணிகள் திரளாக வருகை தருவர், வருவாய் ஈட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த வாடகை வாகன ஓட்டுனர்கள், குதிரை ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டுவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள் சிறுவியாபாரிகள் வரை எதிர்பார்ப்பில் இருந்தது வீணானது. கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தமுடியாத சூழ்நிலை உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,
மேலும்கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஸ்கார்டன் ஆகிய பகுதிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கி கண்களை கவரும் நிலையில் அதை கண்டு ரசிக்கத்தான் சுற்றுலாபயணிகள் இல்லாதநிலையும் உள்ளது.கொடைக்கானலில் சுற்றுலாவை நம்பி மட்டுமே வாழ்க்கையை பல்வேறு தரப்பினரும் நகர்த்தி வரும் நிலையில் சுற்றுலாப்பயணிகள் யாரும் வராததால் கடைகள் அடைக்கப்பட்டு கடைகளில் உள்ள பொருட்கள் வீணாகி குப்பைகளில் கொட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் விரைவில் ஊரடங்கை தளர்வு செய்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு தளர்வுகளுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் வாடகை தள்ளுபடி, வாகன கடன், வீட்டுக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்டவைகளுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் நிவாரண நிதியாக சிறப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொடைக்கானலில் இதமான தட்பவெப்பநிலை நிலவும் நிலையில் அதிகபட்சமாக பகலில் 20 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியசும் நிலவி ரம்மியமான சூழல் காணப்படுகிறது.காற்றில் 70 சதவீதம் ஈரப்பதமும் உள்ளது, இந்த ஆண்டு குளுமையை அனுபவிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். வாழ்வாதாரத்தை இழுந்த நிலையில் கொடைக்கானல் மக்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது