அமராவதி ஆற்றில் முட்செடிகளை அகற்ற வேண்டும் - கரூர் மக்கள் கோரிக்கை
கரூர் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து அமராவதி ஆறு, காவிரியை நோக்கி பயணிக்கிறது. அமராவதி ஆறு கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிபாளையம், பெரியாண்டாங் கோவில் வழியாக கரூர் நகரை வந்தடைந்து பின்னர், பசுபதிபாளையம், புலியூர், மேலப்பாளையம் வழியாகவும், திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் இணைந்து, மாயனூர் நோக்கி ஒன்றுபட்ட காவிரி ஆறு பயணிக்கிறது.இதில் அமராவதி ஆறு, கரூர் மாவட்டத்தில் பயணிக்கும் செட்டிபாளையம், சுக்காளியூர், லைட் ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் வரை, அமராவதி ஆற்றை முற்றிலும் பாதிக்கும் வகையில் சீத்த முட்செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளது.
சீத்த முட்செடிகள் மட்டுமல்லாமல், குப்பைகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. இதனால் ஆற்றின் அருகில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த முட்செடிகளை அகற்றாவிட்டால், மக்கள் தங்கி இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீத்த முட்செடிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதோடு ஆற்றின் போக்கை மாற்றுவது, போன்ற பல்வேறு பாதிப்புகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் அரசு சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் அமராவதி ஆற்றுப்பகுதியில் படர்ந்து இருந்த, சீத்த முட்செடிகள் போர்க்கால அடிப்படையில் அந்த சமயத்தில் அகற்றப்பட்டன.
தற்போதைய நிலையில், திரும்பவும் அமராவதி ஆற்றில் சீத்த செடிகள் மற்றும் குப்பைகள் அதிக அளவு ஆக்கிரமித்துள்ளது. தமிழக முழுவதும் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமராவதி ஆற்றுப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்து, பல்வேறு பாதிப்புகளையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வரும் இந்த சீத்த முட்செடிகளை போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, அதனை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளது. இந்த வருடம் அதிக இடங்களில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இந்த சமயத்தில் பெய்யும் மழை தான் ஆண்டின் சராசரி மழையை எட்ட உதவுகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்ற, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.