வாழத்தான் வழியில்லை! செத்தாலும் கூட இடமில்லையா? கரூர் அருகே நவீன தீண்டாமை..
இரண்டு சமுதாய மக்களுக்கு தனியாக அமைத்து தரப்பட்டுள்ள சுடுகாட்டில் குறிப்பிட்ட சமுதாய மக்களின் உறவினர்கள் இறந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்யவிடாமல் நவீன தீண்டாமையை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கரூர் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் சடலத்தை தோள்களில் தூக்கிக்கொண்டு, பொதுமக்கள் வாய்க்காலை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் - சுடுகாடு அமைத்து தர வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா பள்ளபாளையம் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு நான்கு தலைமுறையாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு ஆறடி நிலம் கூட இல்லாததால், அங்கு செல்லும் ராஜாவாய்க்கால் கரையோரம் புதைத்து வருவதாகவும், சுடுகாடு அமைத்து தர வேண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: Karur : சட்டவிரோத குடியேற்றம்! சிக்க வைத்த பாஸ்போர்ட்.. கரூரில் மூவர் கைது
மேலும், அதே ஊரை சேர்ந்த இரண்டு சமுதாய மக்களுக்கு தனியாக அரசு சார்பில் சுடுகாடு அமைத்து தரப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சமுதாய மக்களின் உறவினர்கள் இறந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்யவிடாமல் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளபாளையம் கிராமத்தில் நான்கு தலைமுறையாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு, அரசும் அரசு அதிகாரிகளும், அங்கு வசிக்கும் மற்ற சமூக மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு மார்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அங்கு செல்லும் ராஜாவாய்க்கால் கரையில், புதைக்கும் நிலை நீடித்து வருகிறது.
அதனால் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்த பிரச்சனையை முடித்து தரவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பள்ளபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் சடலத்தை தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு, ராஜவாய்க்காலை கடந்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.