Karur: தென்னிலை அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
சமூக ஆர்வலர்கள் பேசிக்கொண்டிருந்த போது குவாரி ஆதரவாளர் ஒருவர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னிலை அருகே கல் குவாரிகள் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கருத்து கேட்புக் கூட்டத்தில் கல்குவாரிகளில் முறையான ஆய்வுகள் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமலும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் க.பரமத்தி பகுதியில் தமிழகத்தில் அதிகப்படியாக வெப்பமண்டலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு மற்றும் மேற்கு கிராமத்தில் பரமேஸ்வரி மற்றும் சாந்திமதி என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் தென்னிலை பகுயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையிலும், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த குவாரிகள் அருகில் வசிக்கும் விவசாய பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், குவாரி ஆதரவாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குவாரியின் உரிமையாளர்களின் ஆதரவாளர்களில் ஒரு சிலர் கூறினாலும், அனுமதி அளிக்கக் கூடாது என அப்பகுதி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் பேசிய அப்பகுதி பொதுமக்கள் , பலவற்றை மறைத்து ஆவணங்கள் சமர்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அண்டை மாவட்டங்களில் இது போன்று கருத்து கேட்புக் கூட்டங்களில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் நிலையில், தற்போது நடைபெறும் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டங்களில் ஆட்சியர் இதுவரை ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளதாகவும், பல கூட்டங்களில் முந்தைய ஆட்சியர் பிரபு சங்கரும், தற்போதைய ஆட்சியர் தங்கவேல் பங்கேற்பது இல்லை எனவும்,
மேலும் இது போன்ற கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவதற்கு நடத்தாமலே இருக்கலாம், எவ்வளவு கூட்டம் நடைபெற்றாலும் பல்வேறு கல்குவாரிகள் அமைக்கப்பட்டு தான் வருகிறது தற்போது அமைய உள்ள குவாரி அருகே பெட்ரோல் நிறுவனத்திற்கு செல்லும் குழாய் அமைந்துள்ளதால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் குவாரி அமைக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்று குற்றம் சாட்டினர். மேலும் சமூக ஆர்வலர் பேசிக் கொண்டிருந்தபோது குவாரி ஆதரவாளர் ஒருவர் சமூக ஆர்வலரை அடிக்க பாய்ந்ததால் வாக்குவாதமும் ஏற்பட்டது அப்போது குவாரி உரிமையாளர்கள் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.