முன்விரோதத்தால் டாக்டர், வக்கீல் மீது தாக்குதல் - கரூரில் பரபரப்பு
இரண்டு இளைஞர்களை கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கரூரில் முன்விரோதம் காரணமாக மருத்துவர் மற்றும் வழக்கறிஞரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இராணிமங்கம்மாள் தெருவை சார்ந்தவர் நீலம் ஹரிஹரன். மருத்துவரான இவர் இராசிபுரத்தை அடுத்த களங்காணியில் கிளினிக் நடத்தி வருகிறார். கிளினிக்கிள் பணியினை முடித்து விட்டு மாலை 4.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இவர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வரும் அடையாளம் தெரிந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்த மருத்துவரை வழி மறித்து தாக்கியதாகவும், தற்காப்புக்காக மருத்துவரும் அவர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த அவரது சகோதரர் வழக்கறிஞர் நீலம் ரகுவரன் தட்டிக் கேட்டதற்கு அவரையும் தாக்கியும், செல்போனை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், தாக்குதலுக்குள்ளான அண்ணன், தம்பி இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அங்கும் அவர்களை தடுத்து கொலை மிரட்டல் விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இது தொடர்பாக தகராறில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் போலீசார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக் கூறி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சகோதர்கள், எங்களை தாக்கியவர்கள் அடையாளம் தெரிந்த நபர்கள் தான் என்றும், 5 ரோடு பகுதியில் உள்ள உணவகம், டீக் கடைகளில் மாமூல் வாங்குவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அதை மனதில் வைத்துக் கொண்டு எங்களை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தனர். கரூர் நகர காவல் நிலையத்தில் குற்றவாளிகளை பிடித்து கொடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ஆய்வாளர் நாகராஜ் தன்னிடம் வழக்கு பதிவு செய்ய 70000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜிடம் கேட்ட போது- வாகனத்தை முந்தி செல்வது தொடர்பாக 2 தரப்பினரும் 5 ரோடு பகுதியில் மோதிக் கொண்டதாகவும், இதில் இவர்களால் தாக்குதலுக்குள்ளான இளைஞர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பாக தன்னை கையால் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.
மேலும், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து வைத்திருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்ததால், எங்களுடைய வாகனத்தில் சென்று அழைத்து வந்து விசாரித்ததாகவும், அப்போது அவர்கள் அந்த குற்றவாளிகள் தான் என கூறினர். கையால் தாக்கியதற்காக ஜாமீனில் வரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு இல்லை என்பதால் இரு தரப்பையும் மாலை 5 மணிக்கு வரும்படி அனுப்பி வைத்தேன்.
இந்நிலையில் போலீஸ் உங்கள் புத்தியை காட்டி விட்டீர்கள் தானே, நாங்கள் யார் என்பதை காட்டுகிறோம் எனக் கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 தரப்பினரிடமும் புகார் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.