மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து 51 ஆயிரம் கன அடியாக சரிவு
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 49 ஆயிரத்து, 720 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 51 ஆயிரம் கன அடியாக சரிந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு மாலை வினாடிக்கு, ஒரு லட்சத்து, 57 ஆயிரத்து, 713 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 50 ஆயிரத்து, 940 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 49 ஆயிரத்து, 720 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,998 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,092 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஆற்றுப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 3,566 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.60 அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.14 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், காலை 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சியில் மட்டும், 31.20 மி.மீ., மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் விவசாய பணிகள் சுறுசுறுப்பு
அமராவதி அணையின் நீர்மட்டம், திருப்திகரமாக இருப்பதால், கரூர் மாவட்ட ஆற்றுப் பகுதிகளில் நெல், சோளம் பயிரிட நிலத்தை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த மே, 20 முதல் குடிநீருக்காக, முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கடந்த மாதம், 24 முதல் சம்பா சாகுபடி துவக்க பணிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 87.60 அடியை தாண்டியுள்ளது. இதனால், சம்பா சாகுபடிக்காக முழுமையாக அதிகபட்ச தண்ணீர் விரைவில் திறக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றி மலை வட்டார பகுதிகளில் நெல், சோளம், மஞ்சள் பயிரிட விவசாயிகள் டிராக்டர்கள் மூலம், நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு தற்போது, 2,092 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே செட்டிபாளையம் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், ஷட்டர்கள் மூலம் ஆறு மற்றும் பாசுர வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது.