கரூரில் மழை நீருடன் கலந்து வரும் கழிவு நீர் - காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு
நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயப்பட்டறை கழிவு நீர் - திருப்பூர் மாவட்டத்தில் திறக்கப்படும் கழிவு நீர் மழை நீருடன் கரூர் மாவட்டத்திற்குள் வந்து காவிரி ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது.
கரூர் கொளந்தாபாளையம் முதல் நொய்யல் வரை சுமார் 25 கி.மீ காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் பெரும் மாசு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர் மாவட்டம் வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் என்கின்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நொய்யல் ஆறு முற்றிலும் பாழ்பட்டு போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை சென்று தடையாணை பெற்று வந்தனர்.
திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகள் ஜீரோ டிஸ்சார்ஜ் செய்து நொய்யல் ஆற்றில் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என்கின்ற உத்தரவை போட்டது. ஆனால், திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகள் மழை காலங்களில் வரும் மழைநீருடன் சாயப்பட்டறை கழிவு நீரையும் திறந்து விட்டு விடுகின்றனர். இந்த வரிசையில் கடந்த 4 நாட்களாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். அந்த தண்ணீரானது நொய்யல் ஆற்றில் கரூர் மாவட்டம் கொளந்தாபாளையம் முதல் நொய்யல் வரை சுமார் 25 கி.மீ பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் பெரும் மாசு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.