டொம்பர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு கலைஞர் நகர் என பெயர் வைத்த கரூர் மாவட்ட ஆட்சியர்
’’கலைஞர் என்ற சொல் முன்னாள் முதலமைச்சரையும் குறிக்கும், கலைஞர்களான உங்களையும் குறிக்கும் எனவே கலைஞர் நகர் என்று பெயர் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’’
கரூர் மாவட்டத்தில் வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, கிடைத்த கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வரும் கலைக்கூத்தாடிகள் என்று சொல்லப்படும் டொம்பர் இன மக்கள் 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைவதற்கும், பொருளாதாரத்தில் வளம் பெறுவதற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 358 நபர்கள் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை வழங்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த கடந்த ஆண்டு டிசம்பரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் கிராமத்தில், டொம்பர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கியதால், அவர்களின் 50 ஆண்டுகால நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இவலச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட அனைவருக்கும் அரசின்திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு கட்டித்தரவும், அந்தப்பகுதிகயில் மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டதன் அடிப்படையில் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ள பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து டொம்பர் இன மக்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கூடாரங்களுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு வருடத்திற்குள் உங்கள் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும், மேலும், இந்தப்பகுதியிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலகம் அமைத்து அதில் உங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், உங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல், அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். குறிப்பாக பெண்குழந்தைகளை 21 வயதிற்கு முன்பு திருமணமம் செய்து வைக்காமல் அவர்களை கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நான் உங்களுக்கு வைக்கின்றேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். அப்போது டொம்பர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பகுதிக்கு நல்ல பெயர் சூட்டித்தருமாறு ஆட்சித்தலைவரை கேட்டுக் கொண்டபோது, கலைஞர் நகர் என்ற பெயரை பரிந்துரைத்த ஆட்சித்தலைவர், கலைஞர் என்ற சொல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரையும் குறிக்கும், கலைஞர்களான உங்களையும் குறிக்கும் எனவே கலைஞர் நகர் என்று பெயர் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் ஏகோபித்த வரவேற்போடு கரவொலி எழுப்பி ஏற்றுக் கொண்டனர்.