“சுத்தம் என்பது நமக்கு முக்கியம் மத்ததெல்லாம் அப்புறம்” - களத்தில் குதித்த தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு
கோடை விடுமுறை முடிந்து கரூரில் பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் புதர்போல் மண்டி கிடந்த குப்பைகளை தூய்மைப்படுத்திய ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டு.
நாங்கள் வெறும் ஆசிரியர்கள் மட்டும் இல்ல மாணவிகளுக்கு அம்மாவும்தான் என்ற சொல்லிற்கு கேட்ப தனது பிள்ளைகள் குப்பையில் இருப்பதை பார்த்து திடீரென துடைப்பத்தை எடுத்த தலைமை ஆசிரியர் உடன் மற்ற ஆசிரியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியானதால், பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 620 மாணவிகள் கல்வி பயின்று வரும் கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக கோடை விடுமுறை காலத்தில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அதிகப்படியான மரக்கிளைகள், பள்ளியின் ஒரு பகுதியில் போடப்பட்டு புதர் போல மண்டி காட்சியளித்தது.
மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் வருவதற்கு முன்பாகவே பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா களத்தில் இறங்கி அந்த குப்பைகளை அப்புறப்படுத்தினார். தலைமை ஆசிரியரை தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதை கவனித்த மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.
கரூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பள்ளிக்கு வந்தனர். மேலும் தமிழக அரசு பள்ளி திறப்பு முதல் நாளில் மாணவர்களுக்கு தேவையான பாடநூல் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதே போல் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசு பாடநூலை வழங்கி மாணவர்கள் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாணவ, மாணவிகள் தங்களது நண்பர்களை பார்த்தவுடன் உற்சாகத்தில் கட்டி தழுவி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.