“சிறையில் பேப்பர் படித்தேன்; தாங்க முடியவில்லை” - ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது குறித்து கருக்கா வினோத்
சிறையில் இருக்கும்போது பேப்பர் படித்ததாகவும், அதில் மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வதை படித்து தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியது ஏன் என்பது குறித்து கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சிறையில் இருக்கும்போது பேப்பர் படித்ததாகவும், அதில் மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வதை படித்து தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் விரைந்து அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். சம்பவம் தொடர்பாக கிண்டி சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த செயலில் ஈடுபட்டது பிரபல ரவுடி கருக்கா வினோத் என தெரிய வந்தது.
ஆளுநர் மாளிகை அளித்த புகாரை தொடர்ந்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை டிஜிபி அலுவலகம் வெளியிட்டது. மேலும், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை, சர்தார் வல்லபாய் படேல் சாலையில் தான் வீசப்பட்டது. அவர் 4 பெட்ரோல் குண்டுகளில் இரண்டு வெடித்தன. ரவுடி கருக்கா வினோத்தை 5 காவலர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் பிடிக்க வரும்போது அவர்கள் மீது வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றான். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, விஷமிகள் உள்ளே நுழைய முயன்றதாக கூறியது உண்மையில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கிண்டி போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று மனு மீதான விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் ஏன் பெட்ரோல் குண்டு வீசினார் என்பது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது பேசிய கருக்கா வினோத், “ஜெயிலில் அடைப்பட்டிருந்த சமயத்தில் தினமும் பேப்பர் படிக்கும் போது நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது போன்ற செய்தி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசினேன். எனது மகன் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருவதால் அவனை மெடிக்கல் காலேஜ் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. நீட் தேர்வினால் எனது ஆசை பறிபோகி விடும். பி எப் ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், ஒரே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்ததாகவும்” வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசிகள் சிறையில் இருப்பதால் அவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் அவர்களை உடனே வெளியே விட வேண்டும் எனவும் அதன் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என வாக்குமூலத்தில் கருக்கா வினோத் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை என கருக்கா வினோத் கூறியுள்ளார். மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கிண்டி போலீசார் கருக்கா வினோத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.