தாடி வைத்தால் திருமணத்துக்கு வரமாட்டோம்; தீர்மானம் போட்ட பஞ்சாயத்தார்... அதிர்ச்சியில் இளைஞர்கள்
திருமண நிகழ்ச்சியில் மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்துக்கு வரமாட்டோம் என மீனவ கிராம மக்கள் நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணத்துக்கு வரமாட்டோம்
ஆண்டுதோறும் புதிய புதிய பேஷன்கள் உருவாகி வருகிறது. உடைகளில் வரும் பேஷனை போல தலை முடி, தாடி வைப்பதிலும் பல ஸ்டைல்கள் உருவாகி உள்ளது. ஷிப்பி, டிஸ்கோ, முல்லட், பாக்ஸ், பங்க் என தலை முடியை இன்றைய இளைஞர்கள் அழகுபடுத்தி கொள்கின்றனர்.
இதேபோல் இளைஞர்களிடம், 'தாடி' வளர்ப்பது தனி மோகமாகி உருவாகி உள்ளது. தாடி வளர்ப்பதில் கே.ஜி.எப். கதாநாயகன் யாஷ் வைத்திருந்த புல் லாங் பியட், பிரெஞ்சு போர்க், கோட்டே, ஸ்டபுள் லாங், மீடியம் என பல வகைகள் உள்ளது. கடந்த காலங்களில் மணமகன் கிளீன் ஷேவ் செய்து இருப்பார். ஆனால் இப்போது திருமண கோலத்திலும் மணமகன் தாடி வைத்துள்ளார். இதுதான் இன்றைய பேஷனாக உள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவில் கிராம பஞ்சாயத்தார் யாரும் கலந்து கொள்வதில்லை என, தடாலடியாக முடிவெடுத்துள்ளனர்.
மணமகனுக்கு தாடி இருக்கக் கூடாது என பஞ்சாயத்தார் தீர்மானம்
மேலும், திருமண நிகழ்ச்சியில் மணமகளுக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், மணமகனுக்கு தாடி இருக்கக் கூடாது என்ற பஞ்சாயத்தாரின் தீர்மானம், உள்ளூர் இளைஞர்களை வேதனையில் தள்ளியுள்ளது. ஆனாலும் தனி நபரின் விருப்பத்தில் தலையிடுவதா..? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. இது உள்ளூர் இளைஞர்களிடம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
தாடி வளர்ப்பது என்பது காதல் தோல்வி குறியா ?
முன்பெல்லாம் தாடி வளர்ப்பது என்பது காதல் தோல்வியை குறிப்பதற்காக இருந்தது. ஆனால் இந்த காலத்தில் ஆண்களுக்கு தாடி வைப்பது ஒரு பேஷனாக ஆகிவிட்டது. பெண்களுக்குமே ஆண்கள் வைத்திருக்கும் தாடியின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் தாடியின் மவுசு இளைஞர்களின் மத்தியில் அதிகரித்து விட்டது.
தாடியை வளர்ப்பதற்காக எண்ணை, க்ரீம் என்று சந்தையில் விற்பனைக்கு வந்து அதுவே பல கோடி வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அதன் தேவை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
ஒரு சராசரி ஆணுக்கு 18 வயதிற்குள் முழுமையான தாடி வளர்ச்சி பெற்றுவிடும். இன்னும் சிலருக்கு 30 வயதிற்குள் முழுமையான வளர்ச்சியை பெற்றுவிடும். அதனால் தாடி வளர்க்கையில், ஆண்கள் மன அழுத்தம் கொள்ளாமல் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.





















