தூக்கில் தொங்கவிடப்பட்டாரா கன்னியாகுமரி இளைஞர்? மரணத்தில் சந்தேகம்.. போலீஸ் பரபர விளக்கம்
கன்னியாகுமரியை சேர்ந்த தனுஷ் என்ற தலித் இளைஞரின் மரணம் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளுக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் தனுஷ் என்ற தலித் இளைஞரின் மரணம் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சந்தேகத்தை கிளப்பும் இளைஞரின் மரணம்:
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியை சேர்ந்த துரைசாமி ஒன்பவரது மகன் தனுஷ் வயது 22 காவஸ்தலத்தில் உள்ள தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 19.06.2025 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் தந்தை துரைசாமி வயது 49 கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல்நிலையத்தில் இயற்க்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பல செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூகவலைதளங்களிலும் இறப்பு தொடர்பாக பல்வேறு யூகங்களும் சந்தேகங்களும் பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவத்தின் உண்மை தன்மை பின்வருமாறு.
மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாரின் சம்பவ இட விசாரணையிலும், சாட்சிகள் விசாரணையிலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைபெற்ற விசாரணையிலும் இறந்து போன தனுஷ் என்பவரும் குலசேகரம் காவஸ்தலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்ததுள்ளனர்.
இடையில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். மேற்படி இளைஞர் மீண்டும் காதலை தொடர முயற்சி செய்துள்ளார். அதனை அந்த பெண் நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கன்னியாகுமரி போலீஸ்:
இன்று 20.06.2025 இறந்து போன நபரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனை அடிப்படையிலும் இளைஞரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது.
இது தொடர்பாக தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது. எனவே, இளைஞரின் இறப்பு தொடர்பாக எவரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.





















