(Source: ECI/ABP News/ABP Majha)
தொழில் முனைவோர்கள் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - கனிமொழி எம்.பி.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாநாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்:
மாநாட்டில் 98 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.1583.80 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.1500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 டிரில்லியன் பொருளாதார இலக்கு:
புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறி பேசிய கனிமொழி எம்.பி , தமிழகம் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. தமிழகம் தொழில் தொடங்குவதற்கான முக்கியமான தளமாக மாறி உள்ளது. தமிழகத்துக்கு அதிக முதலீட்டாளர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இது போன்ற மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக மாறி உள்ளது. இதனால் பல நாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதே போன்ற கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் உயர்ந்த இலக்கை அடைந்து உள்ளோம். அதிக உயர்கல்வி பெற்றவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதே போன்று தொழில் முனைவோர் ஒரே இடத்தில் அனைத்து அனுமதிகளையும் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொழில் முதலீட்டாளர்களுக்கு அரசு உதவியாக இருந்த வருகிறது.
தமிழக அரசு உறுதுணை:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மிகவும் முக்கியமான துறை ஆகும். தமிழ்நாட்டில் 49.45 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெண்கள் பலர் தொழில் முனைவோராக உள்ளனர். ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் சிறு, குறு நிறுவனங்கள் 49 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இது மிகவும் முக்கியமானது ஆகும். சிறு, சிறு தொழில்நுட்ப மாற்றங்களால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கும் நிலை ஏற்படும்.
இதனல் நாம் தொடர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் அதிக அளவில் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. நீங்கள் அதிக ஆர்வத்தோடு செயல்பட வேண்டும். உங்களுக்கு எந்தெந்த வகையில் உதவி தேவையோ, அந்த வகையில் உங்கள் கனவுகளை நிறைவேற்ற, தமிழக அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கப்பல் முகவர் எட்வின் சாமுவேல், தூத்துக்குடி துடிசியா தலைவர் நேருபிரகாஷ், தூத்துக்குடி இந்திய வியாபார தொழில் சங்க தலைவர் கோடீசுவரன்கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விஜய் ஆனந்த், முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.